பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்123

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
111.
வலங்கொண்ட மழுவுடையீர் வளைகொண்டு     
   விற்பீர்போல் மதுரை மூதூர்க்     
குலங்கொண்ட பெய்வளையார் கைவள்யெல்     
   லாங்கொள்ளை கொள்கின் றீராற்     
பலங்கொண்ட செட்டுமக்குப் பலித்ததுநன்     
   றானீரிப் பாவை மார்க்குப்     
பொலங்கொண்ட வரிவளைகள் விற்பதற்கோ     
   கொள்வதற்கோ புறப்பட் டீரே.    
(8)

நேரிசை வெண்பா
112.
பட்டிருக்கத் தோலசைஇப் பாண்டரங்கக் கூத்தாடும்
மட்டிருக்கு நீப வனத்தானே - கட்ட
விரும்பரவத் தானேநின் மென்மலர்த்தா ளன்றே
தரும்பரவத் தானே தனை.    
(9)

    111. இது கண்டோற் கூற்று.

    சோமசுந்தரக் கடவுள் வளையல் விற்ற திருவிளையாடலை நினைந்து கூறியது.

    (பி-ம்.) ‘விற்பார்போல்.’ சிவபெருமான் திருவழகைக் கண்ட மகளிர்க்கு உடல் மெலிந்தமையால் வளைகள் கழன்றன வென்பதை நினைந்து கைவளையெல்லாம் கொள்ளை கொள்கின்றீரா லென்றார். செட்டு - வியாபாரம். செட்டுப் பலித்தலாவது அதிக லாபம் உண்டாதல். நன்று - அழகிது; ஆல் - அசை.

    112. அசைஇ - கட்டி பாண்டரங்கக் கூத்து - திரிபுரசங்கார காலத்தில் சிவபெருமான் ஆடிய திருநடம் (கலி. 1: 0, ந.) மட்டு - தேன். நீபவனம் - மதுரை: நீபம் - கடம்பு. கட்டவிரும்பு அரவத்தானே; கட்ட - கச்சாக்க் கட்டிக்கொள்ளுதற்கு; அரவம் - பாம்பு. மலர்த்தாள் பரவத் தன்னைத் தானே தருமென்க; நின்னைப்பரவுதல் மிகையென்றபடி. “நின்னிற் சிறந்த நின்றாளினையவை” (பரி. 4:62) என்பதும், வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் தாளிணையை யுடையை’ என்னும் அதனுரையும் இங்கே அறிதற்குரியன. திருவடியே வீடாயிருக்குமாதலின் அவ்வடி தன்னைத் தருமென்றது முத்தியையளிக்குமென்னும் கருத்தை யுடையது (முருகு. 62-3, ந.)