பக்கம் எண் :

கந்தர் கலிவெண்பா15

94.
றாரகனு மாயத் தடங்கிரியுத் தூளாக
வீர வடிவேல் விடுத்தோனே - சீரலைவாய்த்
95.
தெள்ளு திரைகொழிக்குஞ் செந்தூரிற் போய்க்கருணை
வெள்ள மெனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
96.
கயேந்திரனுக் கஞ்ச லளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்திற் புக்கிமையோர் வாழச் - சயேந்திரனாம்
97.
சூரனைச்சோ தித்துவரு கென்றுதடந் தோள்விசய
வீரனைத்தூ தாக விடுத்தோனே - காரவுணன்
98.
வானவரை விட்டு வணங்காமை யாற்கொடிய
தானவர்க ணாற்படையுஞ் சங்கரித்துப் - பானுப்

    94. மாயம் தடகிரி - மாயையொடு பொருந்திய பெரியமலை; என்றது கிரௌஞ்சமலையை: “வீரவடிவேல்” (முருகு. இறுதிவெண்பா.) அலைவாய் - கடலிடத்தே.

    94-5. சீரலைவாய்த் தெள்ளுதிரை கொழிக்கும் செந்தூர்: “அலைவாய்ச் செருமிகு சேஎய்” (அகநா. 266); “வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில், நெடுவேள்” (புறநா. 55); “நஞ்செந்தின் மேய வள்ளிமணாளன்” (தே.) தவிசு - பீடம், கடலருகே வெள்ளமெனவிருந்தென்றது ஒரு நயம்.

    95-6. வெள்ளைக் கயேந்திரன் - வெள்ளையானையையுடைய இந்திரன், அஞ்சல் - அபயம்; இப்பொருள் அதற்கு உளதாதலை, மாயூரத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் திருநாமமாகிய அபயாம்பிகை என்பது தமிழில் அஞ்சல் நாயகியென்று வழங்கும் வழக்காற்றாலறியலாகும். மயேந்திரம்- வீரமஹேந்திரம்; சூரனது இராசதானி. மயேந்திரம் - மஹேந்திரம்; வடமொழி. முப்பத்து மூன்றாவது மெய்யாகிய ஹகாரத்திற்குத் தமிழில் யகரம் வருவபற்கு இலக்கணம், “முப்பானுறுமூன், றதனுக்குலோபமும் யவ்வொடு கவ்வு மறைவர்களே” (வீரசோழியம், தத்திதப். 7) என்பதாம்; இச்சூத்திரத்தின் உரையிற் காட்டிய வைதேயி. மயிமை, மயிதலம் என்ற உதாரணங்களையும் காண்க. சயேந்திரன் - வெற்றியையுடைய அசுரர் தலைவன்; இந்திரனென்பது தலைவனென்னும் பொருள் குறித்து நின்றது, மிருகேந்திரனென்புழிப்போல.

    97. சோதித்து - வினாவி: சோதித்தல் - வினாதல்; இது மலைநாட்டு வழக்கு. வருகென்று - வருக என்று. தடந்தோள் விசயவீரன் - வீரவாகு தேவர்.

    98. விட்டென்னும் வினையெச்சம் வணங்காமையா லென்பதன் முதனிலையைக் கொண்டு முடிந்தது. தானவர்கள் அசுரர்கள், நாற்படை - ரத கச துரக பதாதிகள்.