பக்கம் எண் :

168குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
194.
பாமிக்குப் பயின்மதுரைப் பரஞ்சுடரே யொருத்திகயற்
    பார்வை மட்டோ
காமிக்கு மடந்தையர்கட் கயலெல்லா முமையடைதல்
    கணக்கே யன்றோ
மாமிக்குக் கடலேழும் வழங்கினீ ரொருவேலை
    மகனுக் கீந்து
பூமிக்குட் கதலைவறி தாக்கினீர் பலக்கடலும்
    போக்கி னீரே.    
(91)
195.
நீரோடு குறுவெயர்ப்பு நெருப்போடு நெட்டுயிர்ப்பும்
    நெடுங்கண் ணீரிற்
பீரோடு வனமுலையுங் குறையோடு நிறையுயிரும்
    பெற்றா ளன்றே
காரோடு மணிகண்டர் கடம்பவனச் சொக்கர்நறை
    கமழ்பூங் கொன்றுத்
தாரோடு மனஞ்செல்லத் தளையோடுந் தான்செல்லாத்
    தமிய டானே.    
(92)

    194. கண்டோர் கூற்று. ஒருத்தி - அங்கயற்கண்ணம்மை. காமிக்கும் - விரும்பும். கணக்கு - நியாயம் (417.) மாமி - காஞ்சனமாலை கடல் நீராடும் பொருட்டு மதுரையிலுள்ள ஒரு சிவ தீர்த்தத்தில் எழுகடலும் வரும்படி செய்தருளியது. ஒரு வேலை - ஒரு வேற்படையை; ஒரு சமுத்திரத்தை யென்பது வேறு பொருள். மகன் - உக்கிரகுமார பாண்டியர்; அவர் கடல் சுவற வேல்வித்தமையின், ‘கடலை வறிதாக்கினீர்’ என்றார். பவக்கடல் - பிறவிக்கடல்.

    ஏழுகடலை மாமிக்கு ஈந்து, ஒரு கடலை மகனுக்கு ஈந்து, பூமிக்குள் கடலை வற்றச் செய்து, பவக்கடலையும் போக்கியதனால் கயல்கள் தாம் வாழ்தற்குரிய இடங்களைப் பெறாவாகி உம்மையடைந்தன; இது நியாயமே என்பது இச்செய்யுளின் கருத்து.

    195. செக்கநாதரைத் தரிசித்து மயலுழந்த தலைவியின் நிலைக்கு இரங்கித் தோழி கூறியது.

    நீர் ஓடிய குறு வெயர்ப்பு; வெயர்ப்பு - வேர்வை. நெருப்பு - வெம்மை. கண்ணீரோடு பீர் ஓடும் முலை; பீர் - பசலை. குறையோடு நிறைந்த உயிரும். அன்று, ஏ: அசை நிலைகள்; தளை = தள்ளை - தாய்; கட்டு. தள்ளையோடு தான் செல்லாத் தமிழளென்றது தானே தனித்துச் சென்றாளென்றவாறு; தாயோடு சென்றிருப்பின் இவை உண்டாதற்கு ஏடு இராதென்பது குறிப்பு. (பி-ம்.) ‘தன்னோடுந் தான் செல்லாத்’.