பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்169

பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
196.
தமர நீர்ப் புவன முழுதொருங் கீன்றாள்
   தடாதகா தேவியென் றொருபேர்
தரிக்கவந் ததுவுந் தனிமுத லொருநீ
   சவுந்தர மாறனா னதுவும்
குமரவேள் வழுதி யுக்கிர னெனப்பேர்
   கொண்டதுந் தண்டமிழ் மதுரம்
கூட்டுண வெழுந்த வேட்கையா லெனிலிக்
   கொழிதமிழ்ப் பெருமையா ரறிவார்
பமரம்யாழ் மிழற்ற நறவுகொப் புளிக்கும்
   பனிமலக் குழலியர் பளிக்குப்
பானிலா முன்றிற் றூநிலா முத்தின்
   பந்தரிற் கண்ணிமை யாடா
தமரம்நா டியரோ டம்மனை யாட
   ஐயநுண் ணுசுப்பள வலவென்
றமரரு மருளுந் தெளிதமிழ்க் கூடல்
   அடலரா வலங்கல்வே ணியனே.    
(93)

    196. முதல் இரண்டடியில் தமிழின் பெருமை கூறப்படும்.

    (அடி, 1) தமரம் - ஒலி. ஈன்றாள் - உமாதேவியார். சவுந்தரமாறன் - சுந்தரபாண்டியர்.

    (2) வழுதி உக்கிரன் - உக்கிர குமாரபாண்டியர். மதுரம் - இனிமை. கூட்டுண - கொள்ளை கொண்டுண்ண. கொழிதமிழ்: 385-7.

    (3) பமரம் = பிரமரம் - வண்டு. நறவு - தேன். குழலியர் - மதுரையிலுள்ள மகளிர். பால் போன்ற நிலா வீசும் முற்றத்தில்.

    (3-4) கண்ணிமையாடாது அம்மனையாடுதல் அவ்விளையாட்டில் அவர்களுக்கிருந்த ஊக்கத்தைப் புலப்படுத்தியது. அமரர் நாடியர் - தெய்வ மகளிர். ஐயம் நுண் நுசுகப்பளவு அல்ல-சந்தேகம் அவரது நுண்ணிய இடையின் திறத்தில் மட்டும் அன்று; உடலிலும் உண்டு. இயல்பாகவே இம்மகளிருக்கு இடை உண்டோ இல்லையோவென்ற ஐயம் இருந்தது. இப்பொழுது இவர்கள் கண் இமையாதிருத்தலினாலும் பேரழகாலும் இவர் மேனிகள் தெய்வ மகளிர் மேனியை ஒப்பத் தோன்றுதலின். ‘இவர் தெய்வமகளிரோ’ என்னும் ஐயத்தை அவை உண்டாக்கின (469.) அராவாகிய அலங்கல் (484.)