பக்கம் எண் :

கந்தர் கலிவெண்பா17

105.
சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றைமணஞ் செய்தோனே - பொய்விரவு
106.
காம முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு
107.
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத் தினிதிருந்து - மேன்மைபெறத்
108.
தெள்ளித் தினைமாவுந் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளமுவந்
109.
தாறு திருப்பதிகண் டாறெழுத்து மன்பினுடன்
கூறுமவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்

    105. இதுமுதல் முருகக்கடவுள் தெய்வயானையம்மையாரையும், வள்ளி நாச்சியாரையும் முறையே திருமணஞ் செய்தருளியது கூறப்படும்.

    வானுதவும் தெய்வக் களிறு - தெய்வயானை யம்மையார்; இங்கே களிறென்பது யானையென்னும் பொருட்டாய் நின்றது; “குமர நாயகன் றெய்வதக் களிற்றொடுங் கூடி”, “சேணு தித்திடு தெய்வதக் களிற்றினைச் செவ்வேள், நாணி னிற்கட்டி” (கந்த. தெய்வயானையம்மை திருமணப் படலம், 260, 264.)

    106. கலைமுனிவன் - கலைகளை யுணர்ந்த முனிவன்; என்றது சிவ முனிவரை; மடமானென்பதற்கேற்பக் கலையாகிய முனிவனென்னும் ஒரு பொருள் தொனித்தல் காண்க; கலை - ஆண்மான். கண் அருளால் - பார்வையினாற் றுய்த்த கருணையினால்; தேவர்கள் கண்ணால் துய்த்தல் இயல்பாதலின் தேவரை யனைய இம்முனிவரும் இங்ஙனம் செய்தல் அமையும்; ‘தேவர் நோக்கத்தால் நுகர்ந்தாற் போல’ (சீவக. 222, ந.)

    107. ‘பூங்குயில் போல்’ என்றது காக்கையால் வளர்க்கப்பெற்ற குயில் பின்பு தன் இனத்தோடு சேர்தலைப்போலக் குறவர்களால் வளர்க்கப்பெற்றுப் பின்பு தமக்குரிய இடத்தைச் சேர்ந்தாரென்ற கருத்தை உள்ளடக்கியது; “கானமென் குயில்போல் வந்துமீ ளவுந்தன் காவலர் குலத்திடைக் கலந்தாள்” (வில்லி. பா. குருகுலச். 106) என்பதை ஒப்பு நோக்குக. ஏனற்புனம் - தினைக்கொல்லை.

    107-8. கானக் ..........வள்ளிக் கொடி: “கானக் குறப்பெண் குடியிருந்த கன்னிப் புனத்துத் தினைமாவுங் கமழ்தேன் றெளிவு முண்டுசுவை கண்டாய்” (425.)

    109. ஆறு திருப்பதி - திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை யென்பன; இவற்றை ஆறு படைவீடென்பர். ஆறெழுத்து - ஷடாக்ஷரம்.