பக்கம் எண் :

18குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

110.
கந்திப் பொதும்பரெழு காரலைக்குஞ் சீரலைவாயச்
செந்திப் பதிபுரக்குஞ் செவ்வேளே - சந்ததமும்
111.
பல்கோடி சன்மப் பகையு மவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
112.
பாதகமுஞ் செய்வினையும் பாம்பும் பசாசுமடற்
பூதமுந்தீ நீரும் பொருபடையும் - தீதகலா
113.
வெவ்விடமுந் துட்ட மிருகமுத லாமெவையும்
எவ்விடம்வந் தெம்மை யெதிர்ந்தாலும் - அவ்விடத்திற்
114.
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்டோளும்
அச்ச மகற்று மயில்வேலும் - கச்சைத்
115.
திருவரையுஞ் சீறடியுஞ் செங்கையு மீரா
றருள் விழியு மாமுகங்களாறும் - விரிகிரணம்
116.
சிந்தப் புனைந்த திருடிக முளோராறும்
எந்தத் திசையு மெதிர்தோன்ற - வந்திடுக்கண்
117.
எல்லாம் பொடிபடுத்தி யெவ்வரமுந் தந்துபுகுந்
துல்லாச மாக வுளத்திருந்து - பல்விதமாம்

    110. கந்திப் பொதும்பர் - கமுகஞ்சோலை, எழு கார் - எழுகின்ற மேகத்தை, சீரலைவாய்ச் செந்திப்பதி - திருச்சீரலைவாயாகிய திருச்செந்தூர்; சிறப்புடையகடற்கரையிடத்தே உள்ள திருச்செந்தூரென்பதும் பொருந்தும். ஜயந்தி என்பது செந்தியென வந்ததென்பர். (பி-ம்.) ‘செந்திற்பதி’. செவ்வேள்: முருகக் கடவுள் சிவந்த மேனியை யுடையவரென்பு, “செய்யன்” (முருகு. 206) என்பதனால் அறியலாகும்.

    111. இதுமுதல் வேண்டுகோள் கூறப்படும்.

    அவமிருத்து - அகால மரணம். விக்கினம் - இடையூறு.

    112. பாதகம் - மகாபாதகம், அதிபாதகம், உபபாதகமென்னும் மூவகைப் பாதகங்கள். செய்வினை - சூனியம் முதலியன; ஏவலென்பர். பசாசு: பைசாச மென்பதன் சீதைவு, தீ நீரும் - தீயும் நீரும். படை - ஆயுதம்.

    113. எம்மையென்றது அடியார்களையும் உளப்படுத்தியபடி.

    114. அயில் வேல் - கூர்மையையுடைய வேலாயுதம்.

    115. சீறடி - சிறிய திருப்பாதங்கள்.

    117. உல்லாசமாக - மகிழ்ச்சியாக; “உல்லாச நிராகுல யோகவிதச், சல்லாப வினோதனு நீயலையோ” (கந்தரனுபூதி.)