பக்கம் எண் :

கந்தர் கலிவெண்பா19

118.
ஆசுமுத னாற்கவியு மட்டாவ தானமுஞ்சீர்ப்
பேசுமியல் பல்காப் பியத்தொகையும் - ஓசை
119.
எழுத்துமுத லாமைந் திலக்கணமுந் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித் - தொழுக்கமுடன்
120.
இம்மைப் பிறப்பி லிருவா தனையகற்றி
மும்மைப் பெருமலங்கண் மோசித்துத் - தம்மைவிடுத்
121.
தாயும் பழைய வடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகந் துய்ப்பித்துச் - சேய
122.
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண்
ட்டியேற்கு முன்னின் றருள்.

திருச்செந்தூர்க்கந்தர் கலிவெண்பாமுற்றிற்று.


    118. நாற்கவி - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி, அட்டாவதானம் - ஒரே சமயத்தில் எட்டுவகை வினாக்களுக்கு விடையளித்தல்; அவதானம் - கவனம். இயல் - இலக்கணம். “நாற்கவியும், பாடும் பணியிற் பணித்தருள்வாய்”, “சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல, நல்வித்தை யுந்தந்தடிமை கொள்வாய்” (701, 707) என இவ்வாசிரியர் கலைமகள் மாட்டும் நாற்கவி, அவதானம் முதலியவற்றை விரும்பித் துதிப்பர். ஓசை - ஒலி.

    119. எழுத்து முதலாம் ஐந்து இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென்பவற்றின் இலக்கணம்.

    120. இருவாதனை - அகப்பற்று, புறப்பற்று, மும்மைப் பெருமலங்கள் - ஆணவம், கன்மம், மாயை. மோசித்து - நீக்கி; 69. தம்மை விடுத்து - பசுபோதம் நீங்கி; “தன்னை யிழந்தவர் முன், யானென்று சென்றிடுங் காசிப்பிரான்” (682.)

    121. பழைய அடியார் - தொன்றுதொட்டு அடிமைத்திறம் பூண்டோர்; “பழைய தொண்டர்கள்” (தே. திருஞா. திருக்கண்டியூர்); “ஐயா பழவடியோம்” (திருவா.) அடியாருடன் கூட்டி: “அடியேனுன், அடியார் நடுவுளிருக்கு மருளைப் புரியாய்” (திருவா.) பரபோகம் - பேரின்பம். துய்ப்பித்து - நுகரச் செய்து, சேய சிவந்த; நண்ணற்கரிய எனலுமாம்; சேய்மை - தூரம்.

    122. கடி ஏற்கும் - மணத்தைக் கொண்ட.