பக்கம் எண் :

174குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு


அறுசீர்ச் சந்தவிருத்தம்
204.
உடையதொர் பெண்கொடி திருமுக மண்டலம்
   ஒழுகுபெ ருங்கருணைக்
கடலுத வுஞ்சில கயல்பொரு மொய்ம்புள
   கடவுணெ டும்பதியாம்
புடைகொள் கருங்கலை புனைபவள் வெண்கலை
   புனையுமொர் பெண்கொடியா
வடகலை தென்கலை பலகலை யும்பொதி
   மதுரைவ ளம்பதியே.    
(101)

        பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
205.
    வள்ளைவாய் கிழித்துக் குமுழ்மறிந் தமர்த்த
        மதர்ரிக் கண்ணியு நீயும்
    மழலைநா றமுதக் குமுதவாய்க் குழவி
        மடித்தளத் திருத்திமுத் தாடி
    உள்ளநெக் குருக வுவுந்துமோந் தணைத்தாங்
        குகந்தனி ரிருதிரா லுலகம்
    ஒருங்குவாய்த் தீருக் கொருதலைக் காமம்
        உற்றவா வென்கொலோ வுரையாய்

ஆம். (பி-ம்.) ‘உறவான வேய்’. கன்றி - வருந்தி. தீ நிலா :202. வேனிலான் - காமன. தினம் இடைந்து இடை நொந்தபோல் - நாள்தோறும் மெலிந்து இடையானது நொந்ததுபோல. மனம் உடைந்தது - உள்ளம் உருகியது. (பி-ம்.) ‘மன மிடைந்தது’.

    204. (சந்தக் குழிப்பு.) தனதன தந்தன தனதன தந்தன தனதன தந்தனனா.

    பெண்கொடி - அங்கயற்கணம்மை; கருணைக் கடலை உதவும் கயல்; சில கயல்: சில - இரண்டு; கயலென்றது கண்களை. மொய்ம்பு - தோள். புடைகொள் - பக்கத்திலே கொண்ட. கருங்கலை - கரிய ஆடை; என்றது கடலை. அதனைப் புனைபவள் நிலமகள். வெண்கலை புனையும் ஓர் பெண்கொடியாகும்படி; உலக முழுதும் புகழ் பரவவென்பது கருத்து; நிலமகள் கலைமகளைப் போலத் தோற்றும்படி யென்பது வேறு பொருள். (பி-ம்.)’பெண் கொடியாம்’, ‘பலகலையும் பொலி’. மதுரைவளம்பதி கடவுளின் நெடும்பதி ஆகும் என்க.

    205. (அடி, 1) வள்ளை: காது. குமிழ் : நாசி. கண்ணி - கண்ணையுடையவள் : உமாதேவியார். குழவியை மடிதலத்தில் இருத்தி; குழவி - முருகக் கடவுள். முத்தாடி - முத்தமிட்டு.