பக்கம் எண் :

நீதி நெறி விளக்கம்181

212.
கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும்
மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு
மற்றிவர் செய்யு முடம்பு.    
(6)

213.
நெடும்பகற் கற்ற வவையத் துதவா
துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே
நீதென்று நீப்பரி தால்.    
(7)

    212. புலவர் பெருமை கூறப்படும்.

    முகமென்றது நாவை. மலரவன் - பிரமன். வண் தமிழோர் - நூற் செல்வத்தைப் பிறர்க்கு உதவும் வண்மையுடைய தமிழ்ப் புலவர். வெற்றுடம்பு - உயிர் நீப்பின் தனக்கென ஒரு பெருமையும் இல்லாத உடம்பு. இவர் செய்யும் உடம்பென்றது நூல்களை; “பல்வகைத் தாதுவி னுயிர்க் குடல் போற்பல, சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின், வல்லோ ரணிபெறச் செய்வன செய்யுள்” என்று நன்னூலார் புலவரது படைப்பை உதலோடொற்றிடுதல் இங்கே நினைத்தற்குரியது. பிரமனைக் காட்டிலும் புலவர் தம் நெஞ்சிற்கு அணியராதலின் இவரெனச் சுட்டினார். மாயாவென்றது நிலைபெறுமென்னும் பொருளில் நின்றது. புகழ் கொண்டு நிலைபெறுமென்றவாறு.

    புலவர்களைப் போலவே கலைமகளைத் தன்பாற் பெற்ற பிரமனது படைப்பு, புகழைப் பெறாமலே அழிந்துவிடும்; புலவர் படைப்போ புகழைப் பெறுதலோடு அழியாமலும் நிற்குமென்றார்.

    இது வேற்றுமையணி.

    213. சொல்வன்மையில்லாரது கல்வி பயனின்றென்று கூறுகின்றார்.

    நெடும்பகற் கற்ற - பல நாட்கள் கற்றனவாகி. அவையம் - அறிஞர் சபை. உதவாது - சொல்லுதற்குப் பயன்படாமல். உடைந்துளார் - பின்னடைந்தோர். உட்குவரும் - அச்சத்தைத் தரும். கல்வி யுடையாரது இயல்பைக் கல்வியின் மேலேற்றிக் கூறினார். கடும்பகல் - யாவரும் காணலாகும் பகலில்; ‘பட்டப் பகலில்; என்னும் வழக்கறிக. ஏதிலான் - அயலான். இல் - இல்லாள். தீதென்று நீப்பரிது - அம்மனைவி உதவாஸேன்று அகற்றி விடுதலைப்போலக் கல்வி தீயதென்று நீத்தல் அரிது; ஆதலின் அவளைக் காட்டிலும் பொல்லாதென்றார். கற்ற கல்வி பிறவிதோறும் தொடருமாதலின் நீப்பரிதாயிற்று.