பக்கம் எண் :

184குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

219.
முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉம்
கற்றன மென்று களியற்க - சிற்றுளியாற்
கல்லுந் தகருந் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால்.    
(13)

220.
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே யிவர்க்குநா மென்று.    
(14)

221.
கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமும்
தலைவணங்கித் தாழப் பெறின்.    
(15)

    கல்வி நலன் - கல்வியாகிய அழகு. முழுமணிப்பூண் - முற்றும் மணிகளால் அமைக்கப்பட்ட ஆபரணம். “குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்ச ளழகு மழகல்ல - நெஞ்சத்து, நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற், கல்வி யழகே யழகு” (நாலடி, 131.)

    219. கல்விச் செருக்கு ஆகாதென்கின்றார்.

    களியற்க - செருக்கு அடைதலை ஒழிக. கொல் உலைக் கூடத்தினால் - கொல்லனது உலைக்களத்திலுள்ள சம்மட்டியால். (பி-ம்.) ‘கல்லந் தகரும்’ பின் இரண்டடிகள் ஒட்டணி. பெரிய கல்வியுடையாரும் சிறிய கல்வியுடையாரால் தோல்வியுறுவரென்பது குறிப்பு; “சிலகற்றார் கண்ணு முளவாம் பலகற்றார்க், கச்சாணி யன்னதோர் சொல்” (அறநெறிச். 43.)

    220. செல்வருக்குத் திருப்தியும், கல்வியுடையாருக்கு மேன்மேலுங் கற்றல் வேண்டுமென்னும் ஆர்வமும் வேண்டுமென்று இதனாற் கூறுவார்.

    தம்மின் மெலியாரை - தம்மைக் காட்டிலும் செல்வத்தில் தாழ்ந்தவர்களை. அம்மா : வியப்பிடைச்சொல். கருத்து அழிக - உள்ளம் உடைக. (பி-ம்.) ‘கற்ற வெல்லாம்’. எற்றே - எவ்வளவு தாழ்ந்தது. இவர்க்கு - இவர் கற்றவற்றிற்கு. நாம் கற்றதெல்லாம் எற்றேயென்று இயைக்க. என்று கருத்தழிக.

    221. கற்றோரும் செல்வரும் வணக்க முடையராதல் வேண்டுமென்று கூறுவர்.

    இல்லார் - கல்வியும் செல்வமும் இல்லாதார். தம் முன்னர் கற்றோரும் செல்வருமாகிய தங்களுக்கு முன். நிற்பபோல் - நிற்றலைப்போல. தாமும்; உம்மை எச்சப் பொருளது வணங்குவதற்கு உபாயம் கூறியபடி. “அறிவோர்க் கழகு கற்றணர்ந்தடங்கல்” (வெற்றிவேற்கை) என்பதனால்