பக்கம் எண் :

திருவாடுரூர் நான்மணி மாலை227

10
விண்டொட நிவந்த வியன்றுகிற் கொடிகள்
மண்டலம் போழ்ந்து மதியக டுடைப்ப
வாணிலா வமுதம் வழங்கியக் கொடிகள்
வேனிலிற் பயின்ற வெப்பம தாற்றுபு
கொடியா ரெத்துணைக் கொடுமை செய்யினும்
15
மதியார் செய்திடு முதவியை யுணர்த்தும்
பன்பணி மாடப் பொன்மதிற் கமலைக்
கடிநகர் வைப்பினிற் கண்டேம்
வடிவ மற்றிது வாழிய பெரிதே.    
(9)

நேரிசை வெண்பா
317.
பெருமான் றமிழ்க்கமலைப் பெம்மான்கைம் மானும்
கருமா னுரியதளுங் கச்சும் - ஒருமானும்
சங்கத் தடங்காதுந் தார்மார்புங் கண்டக்கால்
அங்கத் தடங்கா தவா.    
(10)

பால் - சிவபெருமான் பாகம்; “இல்லை யென்பதிலையோர் மருங்கிலே - யெவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே” (688) என்பர் பின்.

    (10-15) மாடத்தில் கட்டிய கொடிகளின் செயல் கூறுவார். மண்டலம் - வட்டம். நிலா : எழுவாய். கொடியார் - துவசங்கள், கொடியவர்; மதியார் - சந்திரன், அறிவுடையோர்; சிலேடை. தன் வயிற்றைக் கீண்டு வருத்திய கொடிகளின் கொடுமையை உளங்கொள்ளாது அமுதம் பொழிந்து அக்கொடிகளின் வெப்பத்தை ஆற்றிய மதியின் செயல் அறிஞர் செயலைப் புலப்படுத்தியது; “இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக் கால், என்ன பயத்ததோ சால்பு” (குறள், 987) என்பதை ஓர்க.

    (16-8) மணிமாடத்தையும் மதிலையும் உடைய கமலை. கண்டேம் - ஒரே உருவத்தில் ஒருபால் அறம் வளர்ப்ப மற்றொரு பால் இரத்தலைக் கண்டேம். மற்று: அசைநிலை.

    317. சிவபெருமானைத் தரிசித்த தலைவி கூறியது.

    பெம்மானது கையிலுள்ள மானும், கருமான் உரி அதள் - யானையை உரித்த தோல். ஒரு மான் : உமாதேவியார். சங்கம் - குழை, தார் - மார்பிலணியும் மாலை. அவா அங்கத்தில் அடங்காது; அங்கம் - மனம்.

    “கையடைந்த மழுமானுஞ் செழுமானு முழைமானுங் கயலுமானும், மையடைந்த விழிமானு முடனாக வருணேசர் வருகுவாரே” (அருணைக்கலம். 85) என்பதிலும் பலமான்கள் கூறப்படும்.