| வரிசிலைத் தடக்கைக் குரிசின்மற் றொருவன் | 5 | பொன்னெடு மார்பிற் பொலன்கல னிமைப்பத் | | தன்னுருத் தோற்றந் தரிக்கலள் வெகுண்டு | | மாலாயின்னென வணங்கின னிரத்திலிற் | | றோலா மொழியை வாழியை பெரிதெனப் | | புலந்தன ளெழுதலுங் கலங்கினன் வெரீஇக் | 10 | கண்மலர் சிவப்ப மெய்பசப் பெய்தலிற் | | றானு மாலாந் தன்மையள் கொல்லெனத் | | தேறினன் றாழந்து சிலம்படி திருத்திப் | | பஞ்சியிற் பொலிந்த குஞ்சிய னிரப்பக் | | கூடின ளல்லள் கூடா ளல்லள் |
(1-3) பிலிற்றும் - துளிக்கும். மழலையாகிய சொல். ஒருத்தி: எழுவாய்.
(4-9) தலைவி தலைவனது மார்பிலுள்ள ஆபரணத்தில் தன் உருவம் தோற்றக் கண்டு அதனை வேறொரு பெண்ணென்றெண்ணி ஊடினாள். அது கண்ட தலைவன் அவளை வணங்கி, நான் காம மாயக்கமுற்றேனென்னும் பொருள்பட “மாலாயின்ன்” என்றான். அது கேட்ட தலைவி, அவன் தன் மார்பில், திருமாலைப் போல ஒரு பெண்ணை வைத்திருக்கின்றானென்று எணி, “நீ கூறியது உண்மையே; நீ பொய்யே கூறாத இயல்பினை” என்று கூறிச் சினந்தாள்,
பொலன்கலன் - பொன்னாலாகிய ஆபரணம். தோற்றம் - தோற்றுதலை. தரிக்கலள் - வெகுண்டு - பொறாளாகிச் சினந்து. மால் ஆயினன் என - நின்பால் மயக்கமுடையேனாயினேன் என்று கூற. (பி-ம்.) ‘வணங்கினை யிரத்தலின்’இரத்தலின் - தலைவன் தலைவியை இரத்தலினால். தோலா மொழியை - தோல்வி யுறாத மொழியை உடையை; உண்மையான மொழியை உடையாய். மாலாயின்னென்பதற்குத் திருமாலாயினேனென்னும் பொருளை உட்கொண்டு இங்ஙனம் கூறினாள். வாழியை பெரிது : குறிப்புப் பொருளது: “வானேர் பெருமிதம் வாழியே” (தக்க. 562.) என்புழிப்போல. புலந்தனள் - புலவி கொண்டாளாகி.
(10-13) கண்மலர் கோபத்தாற் சிவந்தது. மெய் தலைவனது பிரிவினாற் பசந்தது. கண்சிவப்பும் மெய்யின் பசப்பும் அவளும் திருமாலாயினளோ என்னும் ஐயத்தை உண்டாக்கின. சிலம்படி திருத்தி - அடி வருடி. பஞ்சியிற் பொலிந்த குஞ்சியன் - அவளடியில் வீந்து வணங்குதலின் அவ்வடியிற் பூசிய செம்பஞ்சுக் குழம்பு பட்டுப் பொலிவு பெற்ற மயிரையுடையவனாகி. இரப்ப - பின்னும் இரந்து நிற்ப.
|