| குமரி யிருக்கக் கலாமயிற் கூத்தயர் |
| குளிர்புன மொய்த்திட் டசாரலிற் போய்ச்சிறு |
| குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு |
| குமர னைமுத்துக் குமாரனைப் போற்றுதும். |
| இமிழ்திரை முற்றத் துமேருமத் தார்த்துமுள் |
| எயிறுகு நச்சுப் பணாடவித் தாப்பிசைத் |
| திறுக விறுக்கித் துழாய்முடித் தீர்த்தனொ |
| டெவரு மதித்துப் பராபவத் தீச்சுட |
| அமுதுசெய் வித்திட் டபோனகத் தாற்சுடர் |
| அடரு மிருட்டுக் கிரீவமட் டாக்கிய |
| அழகிய சொக்கற் குமால்செயத் தோட்டிகல் |
| அமர்செய் கயற்கட் குமாரியைக் காக்கவே |
(4)
(2) குமரி - தெய்வயானை. கலாமயில் - கலாபத்தையுடைய மயில் (18,86); கலாபமென்றது கலாமென நின்றது. மயிற்கூத்து; சந்தநோக்கி லகரம் றகரமாயிற்று. புனம் - தினைக்கொல்லை. குறவர் மகள் - வள்ளிநாச்சியார். சலாமிடல்: “சலாமிட” (திருப்புகழ்.) ஏக்கறு - ஆசையால் தாழ்கின்ற. முத்துக்குமாரன்: இவர் இத்தலத்தில் அம்பிகை திருக்கோயிலில் உட்பிராகாரத்தில் வாயு மூலையிற் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவர்.
(3) இமிழ் - முழங்கும். முற்றம் - பரப்பு. மேருமத்து: மந்தரத்தை மத்தாத் கூறுவதே வழக்கமாயினும் அது மேருவின் வட சிகரமாதல் பற்றி மேருவாகவே கூறுதலும் மரபு. ஆர்த்து - கட்டி. முள் எயிறு உகு நச்சு - முள்ளைப்போலக் கூரிய பல்லிலிருந்து உகுகின்ற நஞ்சையுடைய. பணாடவித் தாம்பு - படக்கூட்டங்களையுடைய கயிறு; என்றது ஆதிசேடனை. வாசுகியைத் தாம்பாகக் கொண்டாரென்பதே பெரும்பான்மை வழக்காயினும், ஆதிசேடனைக் கூறுதலும் உண்டென்பது, “திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத், திகழ்பெழ வாங்கித்தஞ்சீரச்சிரத் தேற்றி, மகர மறிகடல் வைத்து நிறுத்துப், புகழ்சால் சிறப்பினிருதிறத் தோர்க்கும், அமுது கடைய விருவயினா ணாகி, மிகாஅ விருவடமாழியன், வாங்க உகாஅ வலியி னொருதோழங்காலம், அறாஅ தணிந் தாருந் தாம்” (பரி. திரட்டு. 1:64-71); “பொன்னெடு மலையைப் பன்னிரு வடங்கொடு, புணரியைக் கடைந்தநாட் புணர்த்த பன்னக, வரசன்” (பழம்பாட்டு; தக்க. 645, மேற்.) என்பவற்றாலும் தெரிய வருகின்றது, துழாய் முடித்தீர்த்தன் - திருமால். மதித்து - கடைந்து பராபவத் தீ - அவமானமாகிய தீ; அவமானமென்றது ஆலகாலத்திற்கு அஞ்சியதைக் குறித்தது.
(4) அமுது செய்வித்திட்ட போனகம் - உண்ணும்படியாகச் செய்த ஆலகாலமாகிய உணவு. சுடர் அடரும் - சந்திர சூரியர்களையும் வருத்தும்.