பக்கம் எண் :

28குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு


(ஆசிரிய விருத்தம்)
7.
மேகப் பசுங்குழவி வாய்மடுத் துண்ணவும்
   விட்புலம் விருந்தயரவும்
வெள்ளமுதம் வீசுங் கருந்திரைப் பைந்துகில்
   விரித்துடுத் துத்திவிரியும்
நாகத்து மீச்சுடிகை நடுவட் கிடந்தமட
   நங்கையைப் பெற்றுமற்றந்
நாகணைத் துஞ்சுதன் றந்தைக்கு வந்துதவு
   நளினக் குழந்தைக்காக்க
பாகத்து மரகதக் குன்றொன்றொர் தமனியக்
   குன்றொடு கிளைத்துநின்ற
பவளத் தடங்குன் றுளக்கண்ண தென்றப்
   பரஞ்சுடர் முடிக்குமுடிமூன்
றாகத் தமைத்துப்பி னொருமுடிதன் முடிவைத்
   தணங்கரசு வீற்றிருக்கும்
அபிடேக வல்லியை யளிக்குல முழக்குகுழல்
   அங்கயற் கண்ணமுதையே.    
(5)

கிரீவம் - கழுத்து; (பி-ம்.) ‘கிரீபம்’. அழகிய சொக்கர்: சோமசுந்தரக் கடவுள் திருநாமம் (108, 157); சொக்கர் - பேரழகுடையவர். தோட்டிகல் - காதணியோடு பொருகின்ற.

    7. (அடி, 1) விட்புலம் - வானோர்; ஆகுபெயர். வெள்ளமுதம் - வெள்ளிய நீர், வெள்ளிய அமிர்தம். திரையாகிய துகில், உத்தி - படப்பொறி.

    (2) நாகத்து மீ - ஆதிசேடனாகிய நாகத்துக்கு மேல். சுடிகை நடுவண் - உச்சிக்கு நடுவில். நங்கை - பூமிதேவி. தன் தந்தை யென்றது திருமாலை. நளினக் குழந்தை - தாமரை மலர் மேலுள்ள பிரமதேவர்.

    (3) பாகத்து - பக்கத்தில். மரகதக்குன்று: திருமால். தமனியக் குன்று: பிரமதேவர். பவளத்தடங்குன்று: சிவபெருமான். சிவபிரானுடைய வலப்புறத்துப் பிரமனும் இடப்புறத்துத் திருமாலும் தோன்றுவராதலின் இங்ஙனம் குறித்தனர்; ஏகபாத ருத்திர மூர்த்தியைக் குறித்த தெனலுமாம். முடிமூன்றென்றது மூன்று நகில்களை.

    (4) ஆகம் - மார்பு. அணங்கரசாக வீற்றிருக்கும் வீற்றிருத்தல் - கவலையின்றியிருத்தல். அளிக்குலம் - வண்டின் தொகுதி.