பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்283

விண்ணொடு மண்ணை விழுங்கி யருட்கதிர்
    விரியு மிளஞ்சுடரே
மெய்ப்புலன் மேய்ந்து சமைந்ததொர் வீட்டை
    விளக்கும் விக்கொளியே
புண்ணிய நாறுமொர் பெண்கனி கனியும்
    புனித நறுங்கனியே
புள்ளூ ரெனவெம துள்ளத் தடநிறை
    புத்தமு தக்கடலே
தண்ணொளி பொங்கிய கருணா நிதியே
    தாலோ தாலேலோ
சங்கத் தமிழின் றலைமைப் புலவா
    தாலோ தாலேலோ.     
(8)

சந்த விருத்தம்
378.
தோலாத முத்தமிழ் நாவா மூவா மாவாமச்
    சூர்வே ரறத்தொடு வேலா நூலா நூலோதும்
சீலாம லைக்கொடி பாலா கீலா மேலாகும்
    தேவாதி பற்கொரு தேவா வோவா தேகூவும்
காலாயு தக்கொடி வீறா வேறா வேறேறும்
    காபாலி பெற்றகு மாரா வீரா பேராளா
சேலார்வ யற்குரு கூரா தாலோ தாலேலோ
    சேனாப திப்பெரு மாளே தாலோ தாலேலோ.        
(9)

    (2) மெய்ப்பலன் ............வீடு: (292); மெய்ப்புலன் - சத்தியஞானம்.

    (3) புண்ணியம் நாறும் - முப்பத்திரண்டு தர்மங்களைச் செய்த. பெண்கனி - உமாதேவியார். அம்பிகை அறம் வளர்த்ததைத் தருமசம்வர்த்தனி என்னும் திருநாமத்தாலும், “இல்லாளே முப்பத் திரண்டறமுஞ் செய்திருப்ப” (617) என இந்நூலாசிரியர் கூறுவதனாலும் உணரலாகும்.

    378. (சந்தக்குழிப்பு.) தானா தனத்தன தானா தானா தானான.

    (அடி, 1) மூவா மாவாம் அச்சூர் - அழியாத மாமரமாகிய அந்தச் சூரபன்மன். நூலா நூல் - வேதம்; வேதம் சுயம்புவென்றபடி; நூற்றல் - நூல் செய்தல்; “நொய்தி னொய்யசொன் னூற்கலுற்றேன்” (கம்ப. பாயிரம்.)

    (2) கீலா - எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளவனே; கீலம் - முளை. தேவாதிபற்கு ஒரு தேவன் - சிவகுரு; தேவாதிபன் - இந்திரனுமாம்.

    (3) காலாயுதக்கொடி - கோழிக் கொடி. வீறு - வேறொருவருக்கில்லாத சிறப்பு. ஏறா ஏறு - பிறரால் ஏறப்படாத இடபம்.