பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்289

தடவுத் தாழியின் மத்தெறி தயிரிற்
    றத்துதி ரப்புனலிற்
றசைகுடர் நிணமொடு மூளை குழம்பச்
    சமர்விளை யாடல்செயும்
குடுமிச் சுடர்வடி வேலைத் தொட்டவ
    கொட்டுக சப்பாணி
கொழிதமிழ் வேத புரிக்கும் ரேசன்
    கொட்டுக சப்பாணி.    
(6)

386.
சமரிற் பட்டவர் வெட்டிய பூதத்
    தலைவர்க ணிற்பமுதற்
றாமரை நாயகன் வயிறு கிழித்துத்
    தந்தொழி றலைநின்றாங்
கமரிற் குரிய மடக்கொடி யாரை
    அலைத்தனர் பற்றியெயிற்
றவுண ரெனத்தமை யுணரார் கணவர்கள்
    ஆர்ப்பில் வெடித்தபெருங்
கமரிற் குருதி பிலத்தை நிரப்பிடு
    களமெதிர் கண்டினியக்
காரவு ணக்கடல் சூரொடு மாளக்
    கடிதிற் றடிதியடற்
குமரக் கடவு ளெனப்பணி வேலவ
    கொட்டுக சப்பாணி
கொழிதமிழ் வேத புரிக்கும் ரேசன்
    கொட்டுக சப்பாணி.    
(7)

    (3) தடவுத்தாழி - பெரிய மண் பானை. தயிரிற் குழம்ப.

    386. போர்க்களத்தில் இறந்துபட்ட அசுரர்கள் தேவராய் வீரசுவர்க்கத்தை யடைந்து, ‘அசுரர் கூட்டத்தை அழிப்பாயாக’ என்று தாமே முருகக் கடவுளை வேண்டுவரென்பது கூறப்படும்.

    (அடி, 1-2) சமரிற்பட்டவர் - போரில் இறதவர்கள். பூதத் தலைவர்கள் - தம்மைக் கொன்ற பூதகணத் தலைவர்கள்; இவர்கள் முருகக் கடவுளின் படையைச் சார்ந்தவர்கள். தாமரை நாயகன் - சூரியன். வீரசுவர்க்கம் அடைபவர் சூரிய மண்டலத்தைக் கீண்டு செல்லும் செய்தி 382-ம் செய்யுளிலும் கூறப்பட்டது. அமரிற்கு உரிய மடக்கொடியார் - போரில் இறந்தோர் பெறுவதற்குரிய வீரசுவர்க்கத்திலுள்ள தெய்வ மகளிர். கணவர்கள் ஆர்ப்பில் - பூதகணத்தினர் செய்த ஆரவாரத்தினால்.

    (3-4) கமர் - வெடிப்பு. களம் - போர்க்களம். தடிதி - கொல்வாயாக குமரக் கடவுள்: விளி.