பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்317

செழிக்குந் தடங்கா விரிநாடா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே
செந்நெற் பழனப் புள்ளூரா
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.         
(3)

423.
மூரிக் களிறோ மழவிடையோ 
    முடுகிற் றெனப்பார்த் துழியுனது 
முகத்தி னழகெம் வடிக்கண்ணால் 
    மொண்டுண் டனம்யா மெனவுமிகப் 
பாரித் தோங்கிப் பூரித்த 
    பைம்பொற் புயத்தைக் கண்ணேறு 
பட்டே மெனவு மடிகள்பகை 
    பாராட் டுவதோர் பண்பன்றால் 
வேரிக் கொழுந்தாற் றிளம்பாளை 
    விரிபூங் கமுகும் பால்பாயும் 
வேழக் கரும்பு மிருட்பிழம்பை 
    விழுங்கிக் கக்குஞ் சுடர்ப்பருதித் 
தேருக் கெழில்செய் சோணாடா 
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே 
செந்நெற் பழனப் புள்ளூரா 
    சிறியேஞ் சிற்றில் சிதையேலே.         
(4)

கரத்தால் - சங்குகளை வீசும் அலையாகிய கையினால்; வளை - கைவளையென்பது மற்றொரு பொருள். சுரபி - காமதேனு. “சோழ வளநாடு சோறுடைத்து” என்று கூறுதலின் அச்சோற்று வளத்தை இங்கே புலப்படுத்தினார. காவிரி என்னும் பெண் தன் வளைக்கரத்தால் பாலுஞ் சோறுங் கலந்து கடல் உண்ணும்படி ஊட்டுமென்றது நயம்.

    423. (அடி, 1) மூரி - வன்மை. வடிக்கண் - மாவடுவின் வகிர் போன்ற கண்; கூர்மையான கண்ணெலுமாம். முகத்தழகைக் கண்ணால் மொண்டு உண்ணுதல்: “இருந்தகுலக் குமரர்தமை யிருகண்ணின் முகத்தழகு கருக நோக்கி” (கம்ப. மிதிலைக் 157). (பி-ம்.) ‘யாமென்றும்’.

    (2) பாரித்து - பருத்து. கண்ணேறுபட்டேம் - திருஷ்டி தோஷம் உண்டாகச் செய்தோம். அடிகள் - ஸ்வாமீ; இங்கே ஒருமையின்கண் வந்தது.

    (3) தாறு இளம் பாளை. வேழக்கரும்பு - இரசதாளிக் கரும்பு.

    (3-4) தேருக்குக் கமுகும் கரும்பும் கட்டி அலங்காரம் செய்யும் மரபு கருதி இங்ஙனம் கூறினார்.