பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்329

சந்த விருத்தம்
438.
பெருகுசுவைத்தெளி நறவொழுகக்கனி கனியமுதே
   பிடிநடைகற்றிட வடிகள்பெயர்த்திடு மடவனமே
கருவரைநெக்குட னுருகமிழற்றுமொர் கிளியரசே
   கருணைசெயத்தகு மளியனிடத்தெனு மொழிபுகலா
அருளில்புனத்தவர் மகளிருபொற்பதம் வருடல்செயா
   அவண்முனெடுத்துநின் முடியின்முடித்திடு கரமலராற்
பருவயிரப்பய சயிலன்முழக்குக சிறுபறையே
   பருதிபுரிச்சிறு குமரன்முழக்குக சிறுபறையே.        
(9)

439.
இழுமென்மொழித்தெளி தமிழின்வடித்திடு நவரசமே
    இதயவிருட்டற வுணர்விலுதித்திடு சுடரொளியே
கழுவுமணிக்கல னடுவிலிழைத்திடு குலமணியே
   கனிதருமுக்கனி யொடுவடிகட்டிய சுவையமுதே
ஒழுகுநறைச்செழு மலர்விரியக்கமழ் புதுமணமே
   உருகுமளத்தருள் பெருகியுவட்டெழு சலநிதியே
பழமறைகட்கொரு முதல்வன்முழக்குக சிறுபறையே
   பருதிபுரிச்சிறு குமரன்முழக்குக சிறுபறையே.        
(10)

    438. (சந்தக் குழிப்பு.) தனனதனத்தன தனனதனத்தன தனதனனா.

    (அடி, 1-3) முருகக் கடவுள் வள்ளிநாயகியாரைப் பாராட்டுதல் கூறப்படும்.

    (1) அடிகள் பெயர்த்திடும் - மெல்ல நடக்கின்ற.

    (2) கருவரை நெக்கு உடன் உருக - கரிய மலை நெகிழ்ந்து ஒருங்கே உருகும்படி; மழலைச்சொல் இசைபோன்றிருத்தலின் அதற்குக் கல் உருகியது. மிழற்றும் - இனிய சொற்களைப் பேசும். அளியனிடத்துக் கருணை செயத்தகும்;தகும்: தேற்றவினை.

    (3) அருளில் புனத்தவர் மகள் - இரக்கமில்லாத குறவருக்கு மகளாகிய வள்ளி நாயகியினது. எடுத்து - அப்பதத்தை எடுத்து.

    439. (அடி, 1) நவரசம் - நகைச்சுவை முதலிய ஒன்பது சுவைகள். இதய இருட்டு - அஞ்ஞானம். உணர்வில் - ஞானத்தில்.

    (1) கழுவு மணிக்கலன் - சாணையிட்ட இரத்தினங்களாலாகிய ஆபரணம். நடுவில் இழைத்திடு குலமணி - நடுநாயகமணி.

    (3) சலநிதி - சமுத்திரம்.