பக்கம் எண் :

342குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

மற்றையது கிளப்பின் மனையற நிரப்பி
35
முற்றுணர் கேள்வியின் முதுக்குறை வெய்திப்
பொருளு மின்பமு மொரீஇ யருளொடு
பொறையு மாற்றலு நிறைபே ரொழுக்கமும்
வாய்மையுந் தவமுந் தூய்மையுந் தழீஇ
ஓரறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக்
40
காலோய் நடைய னாகித் தோலுடுத்
தென்பெழு மியாக்கையன் றுன்புறத் துளங்காது
வரையுங் கானு மெய்திச் சருகொடு
கானீ ரருந்திக் கடும்பனிக் காலத்து
மாநீ ரழுவத் தழுங்கி வேனிலில்

இலக்கணங்களென்பது, “அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து” (குறுந். 21:1) என்பதனாலும் அதன் உரை முதலியவற்றாலும் விளங்கும். ஐவகை வேள்வி: பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானிடம் என்னும் ஐந்துவகை வேள்விகள். வரையாநாளில் - “உச்சியம் போழ்தோ டிடையாம மீரந்தி, மிக்க விருதேவர் நாளோ டுவாத்திதிநாள், அட்டமியு மேனைப் பிறந்தநா ளிவ்வனைத்தும், ஒட்டா ருடனுறைவின் கண்” (ஆசாரக் கோவை, 43) என்று விலக்கப்பட்ட நாட்கள் அல்லாத நாட்களில். முன்னது (24) பெற்றித்து (33) என்க. அன்று, ஏ: அசை நிலைகள்.

    (34-45) துறவறத்தின் இலக்கணம் கூறப்படும்.

    (34) மற்றையது - துறவறம். “ஒழுக்கத்து நீத்தார்” (குறள், 21) என்பவாதலின் ‘மனையற நிரப்பி’ என்றார்.

    (35) முதுக்குறைவு - பேரறிவு.

    (37) ஆற்றல் - புலனைந்தின்வழிச் செல்லாத மனவலி.

    (39) ஓரறிவுயிர் - மரஞ்செடிகொடிகள்.

    (40) தோலுடுத்து: “தோலுடீஇ” (பு. வெ. 168); “தோஒலுடுத்தல்” (தொல். புறத். 20. ந. மேற்.)

    (41) என்பெழுமியாக்கை: “என்பியக்கங் கண்டும் புறந்தரார்” (292); “என்பெழுந் தியங்கும் யாக்கையர்” (முருகு. 130.)

    (42-3) கான் - காடு. ஊரடையாமை தவத்தினர் இயல்பாதலின், ‘வரையுங் கானுமெய்தி’ என்றார்; ‘கடலுங்காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலும்’ (தொல். புறத். 20, ந.) கால்நீர் அருந்தி - காற்றையும் நீரையும் உண்டு.