பக்கம் எண் :

346குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நேரிசையாசிரியப்பா
454.
சலியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்
பலநா ளோதிக் கலைமுற்று நிரம்பி
அளவையி னளந்துகொண் டுத்தியிற் றெளிந்து
செம்பொரு ளிதுவெனத் தேறி யம்பலத்
5
தாரா வன்பினோ டகனமர்ந் திறைஞ்சிப்
பேரா வியற்கை பெற்றனர் யானே
சரியையிற் சரியாது கிரியையிற் றளரா
தியோகத் துணங்கா தொண்பொரு தூக்காது
வறிதே நின்றிரு மன்ற நோக்கிப்
10
பிறவா நன்னெறி பெற்றன னன்றே

    454. (அடி, 1) சலியாது - தளராமல். தவப்பெருந் தொண்டர் - தவத்தையுடைய பெரிய தொண்டர்கள்.

    (3-5) அளவை - பிரமாணம்; உத்தி - யுக்தி; “ஐயந் திரிபின் றளந்துத்தி யிற்றெளிந்து, மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவார்” (307) என்றார் முன்னும். ‘அளவைகளாவன; பொறிகளாற் காணுங் காட்சியும் குறிகளா னுய்த்துணரும் அனுமானமும், கருத்தாமொழியாகிய ஆகமமுமென மூன்று. ஒப்புப்பற்றியுணரும் உவமையும், இங்ஙனமன்றாயின் இது கூடாதென்றுணரும் அருத்தாபத்தியும், உண்மைக்கு மாறாய இன்மையுமென இவற்றைக் கூட்டி ஆறென்பாருமுளர். இவையும் ஒரு வாற்றான் அவற்றுள்ளே அடங்குதலின், மூன்றென்றலே கருத்து. பொருந்துமாறாவது இது கூடும் இது கூடாதெனத் தன்கண்ணே தோன்றுவது; இதனை வடநூலார் யுக்தியென்ப’ (குறள், 242) என்று பரிமேலழகர் எழுதிய உரைப்பகுதி இங்கே பயன்படும். செம்பொருள் - உண்மைபொருள் (457).. அம்பலத்து - திருச்சிற்றம்பலத்தின்கண். இறைஞ்சி - நின்னை வணங்கி.

    (6) பேரா இயற்கை - முத்தி (572; குறள், 370.) தவப்பெருந் தொண்டர் (1) பெற்றனர் (6).

    (7-8) சரியாது - நடவாமல். ஒண்பொருள் தூக்காது ஞான நூல்களை ஆராய்ந்தறியாமல்; என்றது ஞானநெறியில் நில்லாமையைக் குறித்தபடி.

    (9) வறிதே - யாதொரு கருத்தும் இன்றி. மன்றம்நோக்கி யென்றது நடராசப் பெருமான் திருவடியைத் தரிசித்து என்றபடி.

    (1-10) தவத்தையுடைய தொண்டர்கள் ஓதுதல் முதலிய பல பெரு முயற்சிகளைச் செய்து வீடுபெற்றனர்; அடியேனோ அம்பலதரிசன மாத்திரதில் பிறவா நெறி பெற்றேன்.