பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்35

குமரி பொன்னிவயை பொருநை நன்னதிகள்
   குதிகொள் விண்ணதியின் மிக்குக்கு லாவவும்
குவடு தென்மலையி னிகர தின்மைசுரர்
   குடிகொள் பொன்மலைது தித்துப்ப ராவவும்
குமரர் முன்னிருவ ரமர ரன்னையிவள்
   குமரி யின்னமுமெ னச்சித்தர் பாடவும்
குரவை விம்மவர மகளிர் மண்ணிலெழில்
   குலவு கன்னியர்கள் கைக்கொக்க வாடவும்
கமலன் முன்னிவிடு மரச வன்னமெழு
   கடலி லன்னமுட னட்புக்கை கூடவும்
கரிய செம்மலொடு மிளைய செம்மல்விடு
   கருடன் மஞ்ஞையொரு கட்சிக்கு ளூடவும்
கடவி விண்ணரசு நடவும் வெம்முனைய
   களிறு கைம்மலைசெல் கொப்பத்து வீழவும்
கனக மன்னுதட நளினி துன்னியிரு
   கமல மின்னுமொரு பற்பத்துண் மேவவும்

    (2) குமரி - குமரியாறு. பொன்னி - காவிரி. வயை - வையை நதி; சந்தம் பற்றி வையை வயையென்றாயிற்று. (பி-ம்.) ‘வைகை.’ பொருநை - தாமிரபரணி.. விண்ணதியின்மிக்கு - ஆகாய கங்கையைக்காட்டிலும் சிறப்படைந்து. இவளது ஆட்சியில் இருத்தலின் குமரி முதலியன சிறப்படைந்தன. தென்மலையின் நிகரதாகிய குவடு உலகில் இன்மையைப் பொன்மலை துதித்துப் பராவவும்; தென்மலை - பொதியின் மலை (சிலப். 8:19.) குவடு - மலை. பொன்மலை - மேரு. குமரம் இருவர் - விநாயகரும் முருகக் கடவுளும். குரவை - குரவைப்பாட்டு. விம்ம - மிகுதியாக. ஆட - குரவைக் கூத்தாட.

    (3) கமலன் - பிரமதேவன். எழு கடல் - மதுரையிலுள்ளதொரு சிவதீர்த்தம். கரிய செம்மல் - திருமால். இளைய செம்மல் - முருகக் கடவுள். விடு கருடன், விடுமஞ்ஞை யென்க. கட்சி - பறவைக் கூடு. (பி-ம்.) ‘மஞ்ஞையொடொர்’. கடவி - செலுத்தி. விண்ணரசு - இந்திரன். முனை - போர்க் களம். கொப்பம் - யானையைப் பிடிப்பதற்காக வெட்டப்பட்ட பெருங்குழி. கனக மன்னுதட நளினி - பொற்றாமரைத் தீர்த்தம். இருகமல மின்னும் - திருமகளும் கலைமகளும். பற்பம் - பத்மம்; “பற்ப நாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்” (திருவாய்மொழி, 2. 7: 11.) (பி-ம்.) ‘பத்மத்துண்’.