பக்கம் எண் :

370குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அல்கா நல்குர வவாவெனப் படுமே
ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை
உவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்
அவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே, அதனால்
25
இருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும்
நான்மறை முனிவர் மூவா யிரவரும்
ஆகுதி வழங்கும் யாக சாலையிற்
றூஉ நறும்புகை வானுற வெழுவ
தெழுநாப் படைத்த முத்தீக் கடவுள்
30
கடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண
வரும்பெருந் தேவரை வானவர் கோனொடும்
விருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும்

    (21) அல்கா நல்குரவு - குறையாத வறுமை. அவாவின்மை, “வேண்டாமை யன்ன விழுச்செல்வம்” (குறள், 363) எனச் செல்வமாகப் பாராட்டப்படுதலின், அவாவே வறுமையாகும்; “நல்குர வென்னு நசை” (குறள், 1043.)

    (22) ஐயுணர்வு அடக்கிய - செல்லப்படுகின்ற புலன்களின் வேறுபாட்டால் ஐந்தாகிய அறிவை ஒடுக்கிய. மெய்யுணர்வு - உண்மை ஞானம்; “ஐயுணர் வெய்தியக் கண்ணுன் பயமின்றே, மெய்யுணர்வில்லாதவர்க்கு” (குறள், 354) என்பதில் இவ்விரண்டும் வந்தன.

    (23) உவாக்கடல் - பௌர்ணமியிற் பொங்கும் கடல்.

    (24) அவாவாகிய கடலை. புணை - தெப்பம்.

    (25-33) தில்லையில் அந்தணர் மூவாயிரவர் புரியும் வேள்விச் சிறப்புக் கூறப்படும்.

    அவர்கள் செய்யும் யாகத்தில் எழும் புகையானது அக்கினி தேவன் அவியுண்ணவரும் தேவர்களை எதிர்கொள்ள விடுத்தது போல விளங்குமென்பர்.

    (25-6) இருபிறப்பு - உபநயனத்திற்கு முன் ஒருபிறப்பும் அதன் பின்னராகிய ஒரு பிறப்பும் (472:14); “இருப்பிறப்பாளர்” (முருகு. 182); “ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறப் பாளர்” (புறநா. 367:12.)

    (28) எழுவது - எழுதலை.

    (29) அக்கினிக்கு எழு நா உண்டென்பர்; ‘அக்கினி தேவனுக்கு நாக்கு ஏழென்பது வேதம்’ (தக்க. 475, உரை). முத்தீ - ஆகவனீயம். தக்ஷிணாக்கினி, காருகபத்தியம்.

    (30) கடல் அமிழ்து உமிழ்ந்து - தாம் முன்பு உண்ட பாற்கடல் அமுதத்தை உமிழ்ந்துவிட்டு. ஆங்கு: அசைநிலை. அவி - யாகத்தில் தேவர் பெறும் உணவு.