பக்கம் எண் :

374குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

30
மோகினி யென்பவண் மூவரைப் பயந்தனள்
ஆகிய புதல்விய ரங்கவர் மூவருட்
கலையெனப் பெயரிய கணிகைமற் றொருத்தி
தானு மூவரைத் தந்தன ளவருள்
மானெனப் பட்ட மடவர லொருத்தி
35
எண்மூன்று திறத்தரை யீன்றன ளித்திறம்
நண்ணிய மடந்தைய ரையெழு வரையும்
கிளப்பருங் காமக் கிழத்திய ராக
அளப்பில் கால மணைந்தனன் முயங்குழி
முறைபிறழ்ந் திவரொடு முயங்குத லொழிகென
40
அறிஞராங் குணர்த்த வஞ்சின னொரீஇ
நின்னிடைப் புகுந்தனன் மன்னோ வென்னிடை
ஞான வல்லியை நன்மணம் புணர்த்தி
ஆனா ஞேயத் தரும்பொருள் வழங்கி
இறவா வீட்டினி லிருத்திக்
45
குறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே.    
(29)

    (30) மோகினி - அசுத்தமாயை. மூவரென்றது காலம், நியதி, கலையென்பவற்றை.

    (32-3) கலை தந்த மூவரென்றது, வித்தை, அராகம், மான் என்பவற்றை.

    (34) மான் - மூலப்பிரகிருதி.

    (35) எண் மூன்று திறத்தார் - ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, பூதங்கள் ஐந்து, அந்தக் கரணம் நான்கு ஆகிய இருபத்துநான்கு.

    (36) ஐயெழுவர் - மேலே கூறிய குடிலை வழிவந்த ஐவரும் மோகினி வழிவந்த மூவரும், கலைவழிவந்த மூவரும், மான்வழி வந்து இருபத்து நால்வரும்.

    (37) காமக்கிழத்தியர் - ‘கடனறியும் வாழ்க்கை யுடையராகிக் காமக்கிழமை பூண்டு இல்லற நிகழ்த்தும் பரத்தையர்’ (தொல். கற்பு. 10, ந.)

    (39) முறைபிறழ்தலாவது மகண்முதலிய முறையுடையாரோடு கலத்தல்.

    (42) ஞானவல்லி - ஞானமாகிய பெண்.

    (43) ஞேயத்து அரும்பொருள் - அறியப்படுவதாகிய அரிய பொருணை.

    (44) இறவா வீடு - முத்தி.

    (45) குறையாச் செல்வர் - முத்திச் செல்வத்தை யுடையோர்.