பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை379

488.
கூற்றங் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத்
தோற்றந் துடைத்தேந் துடைத்தேமாற் - சீற்றஞ்செய்
ஏற்றினான் றிலை யிடத்தினா னென்னினியாம்
போற்றினா னலங்கும் பொருள்

    இது முதற்குறளீற்றின்கண் இரண்டாசிடையிட்டு ஒரு விகற்பமாய் நடத்தலால் ஒரு விகற்பத்து ஈராசிடை நேரிசை வெண்பா.    
(8)

489.
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்      
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.

    இதுவும் அவ்வாறே இருவிகற்பமாய் நடத்தலால் இருவிகற்பத்து ஈராசிடை நேரிசை வெண்பா.    
(9)

490.
வாழி திருமன்றங் கண்ட மலர்க்கண்கள்      
வாழி பெருமான் புகழ்கேட்ட வார்செவிகள்      
வாழி யவனை வணங்கு முடிச்சென்னி      
வாழியவன் சீர்பாடும் வாய்.      

    இது நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி ஒருவிகற்பமாய் நடத்தலின் ஒரு விகற்பத்து இன்னிசை வெண்பா. இஃது அடிதோறும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் அடிமோனை. இதனுள் அடிதோறும் ஈற்றுச்சீர் முரணத் தொடுத்தமையாற் கடைமுரணுமாம்.     
(10)


    488. குமைந்த - அடக்கிய, கும்பிட்டென்றது தரிசனத்தைக் குறிப்பித்தபடி. தோற்றம் - பிறவி. துடைத்தல் - முற்றும் இல்லையாக்குதல், ஏற்றினான் - இடபவாகனத்துயுடையார், போற்றினால் நல்கும் பொருள் இனி என்? பிறவி தீர்தலாகிய பேற்றினும் பிற பேறில்லை யென்றபடி.

    489. நமரங்காள்; “இருளிலியல் பெய்தாத தென்னோ நமரங்காள் (வளையாபதி) இச்செய்யுள் நீதிநெறி விளக்கத்தின் காப்புச்செய்யுளாகவும் அமைந்துள்ளது.

    எம்பிரானது மன்றை வழுத்தாதது என் என்க.

    490. கண்களென்றது கண்டார் கண்கள் அனைத்தையும்; கண்ட பெருமை யுடைமையின் மலர்க்கண்களென்று சிறப்பித்தார்; தம் கண்களையும் உளப்படுத்திக் கூறியவாறு. வார் செவிகள் - நீண்ட காதுகள். முடிச் சென்னி - முடியையுடைய தலை; முடி - மயிர்முடி. வாழி ....வாய்: “வாழி யெம மனனு மணிநாவும்மே” (206)