இஃது ஒருவிகற்பத்து ஆறடிப் பஃறொடை வெண்பா.
499. பொன்புரிந்த - பொன் விரும்பிய. வெள்ளிப்புரி - வெள்ளி இழை. புரிக்கும் - இழைக்கும். புரிபுரிக்கும்; 434. ஊர்தி - வாகனம். கண்டம் - கழுத்து. கொடியும் ...... அவ்வேறே: “ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியு மவ்வே றென்ப” (புறநா. 1:3-4.) விடைமணி யோசை இரவிலே தனித்த மகளிர்க்குத் துன்பத்தைச் செய்யுமென்பதைக் குறுந்தொகை, 190-ஆம் செய்யுளின் உரை முதலியவற்றால் அறியலாகும். எம்மால் விரும்பப்பெறும் சிவபெருமானுக்குக் கொடியாகவும் ஊர்தியாகவுமுள்ள ஆனேற்றின் மணி எமக்கு இன்பந் தராமல் துன்பத்தைத் தருதல் முரண்பாடுடைய தென்றாள்.
500. கருந்தாது கொல்லும் - இரும்பைத் தொழிற்படுத்தும்; ‘மரங் கொஃறச்சன்’ (புறநா. 206:11) என்பதுபோல நின்றது. கருங்கை - வலிய கை. வல்விலங்கு - வலிய கால்தளை. திருந்தாதார் - பகைவர். தூங்க - தம் செயலொடுங்கி நிற்ப. அருந்தாது அலர் - அரிய பொன் விளங்குகின்ற. தூங்கும் பெருந்தேன் - தங்கியுள்ள பெரிய தேனடையை; என்றது நடராசப் பெருமானை. தூங்கும் பெருந்தேன்: “பெருந்தேன் கண்படு வரை”, “பிரசந்தூங்கு மலை” (குறுந். 273: 5, 392:8)