பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை385

501.
வின்மதனை வென்ற தலர்விழியே யொன்னார்தம்
பொன்னெயி றீமடுத்த தின்னகையே பூமிசையோன்
தார்முடி கொய்தது கூருகிரே யாருயிருண்
கூற்றுயி ருண்ட தடித்தலமே யேற்றான்
பரசும்பினாகமுஞ் சூலமு மென்னே
கரமலர் சேப்பக் கொளல்.

    இது பலவிகற்பத்து ஆறடிப் பஃறொடைவெண்பா. இதன் முதலடி யீற்றயற்சீரொழிந்து ஏனைமுச்சீரும் இரண்டாமெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் கீழ்க்கதுவாயெதுகை. இரண்டாமடி முதற்சீரும் மூன்றாஞ்சீரும் இரண்டாமெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் பொழிப்பெதுகை. மூன்றாமடி முதலயற்சீரொழிந்து ஏனைமுச்சீரும் இரண்டாமெழுத்து ஒன்றத்தொடுத்தமையால் மேற்கதுவாயெதுகை. நான்காமடி முதற்சீரும் ஈற்றுச்சீரும் இரண்டாமெழுத்து ஒன்றத்தொடுத்தமையால்ஒரூஉவெதுகை.    
(21)


    நடராசப் பெருமானைப் போற்றாத சிலர் பகைவர்க்கு அடிமையாகித்தளைபூண்டு நிற்ப, அப்பெருமானைத் தரிசித்து யாம் பெருமகிழ்ச்சியை அடைந்தோமென்றபடி.

    501. வில்லையுடைய மன்மதனை. ஒன்னார் - திரிபுரத்தில் இருந்த அசுரர். பொன் எயில் - பொலிவு பெற்ற புரங்கள். இரும்பு, வெள்ளி, தங்கமென்பவற்றை முறையே கரும்பொன், வெண்பொன், செம்பொன் என்பராதலின் அம்மூன்றாலாய மதில்களைப் பொன்னெயிலென்றாரென்றலும் பொருந்தும். பூமிசையோன் - பிரமதேவர். ஏற்றான் - இடபவாகனத்தை யுடையவர். பினாகம் - சிவபிரானது வில். சேப்ப - சிவப்ப; வீணே தங்கும்படி எனலும் ஆம். கொளல் என்னே.

    சிவபெருமான் செய்த பராக்கிரமச்செயல்களை பலவும் அவர்பாலுள்ள ஆயுதங்களின் உதவியின்றியே நிகழ்ந்தனவாக, அவ்வாயுதங்களை ஒரு பயனுமின்றித் தம் திருக்கரங்கள் சிவக்கும்படி கொண்டிருத்தல் என்ன பயன் கருதி யென்பது கருத்து.

    “காலிற் றுலங்கு, நகத்தாலும் கையிற் பொலிகூர் நகத்தாலும், சீலத்தரக்க னுரங்கொண்டீர் திசைமா முகனைச் சிரங்கொண்டீர், மேலைப்பரத்தை நகைத்தெரிந்தீர்வில்வேள்புரத்தைப்பகைத்தெரிந்தீர், சூலப்படையேன் முழுப்படையேன் சுமந்தீ ரருணை யமர்ந்தீரே” (அருணைக்கலம், 22), “கடகரி நரமடங்கல் காலன்வெண் மதிய ரக்கன், அடுமிய கலன்ப தைப்ப வடர்த்தனை பதத்தாற் கஞ்சன், நடுமுடி கரத்திற் கொண்டாய் நகைத்துமுப் புரமெரித்தாய், படைகள்கைக் கொண்ட தென்கொல் பகருதி வெங்கை யோனே” (வெங்கைக்கலம், 35) என்பவற்றிலும் இச்செய்யுளிற் கண்ட கருத்து அமைந்துள்ளது.