பக்கம் எண் :

388குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

505.
கம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த
அம்பொற் புயத்தாற் கமைந்ததால் - அம்பை
முலையானைக் கோடணிந்த மார்பு.

    இதுவும் அவ்வாறே இருவிகற்பத்தான் வந்தமையால் இரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா. இதன் முதலடிநாற்சீரும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் முற்றுமோனை.    
(25)

506.
போற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்
கூற்றங் குமைக்க வருமுன் னமரங்காள்
ஏற்றுவந்தான் பொற்றா ளிணை.

    இது தனிச்சொல் இன்றி மூன்றடியாய் ஒருவிகற்பத்தான் வந்த ஒரு விகற்பத்து இன்னிசைச் சிந்தியல் வெண்பா. இதன் முதலடிநாற்சீரும் ஒரு சொல்லே வரத் தொடுத்தமையால் இரட்டைத்தொடை.    
(26)

507.
உம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த
தன்பொற் புயம்வேட்டந் தார்முலையும் பொன்பூத்த
பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து.

    இஃது இரண்டு விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. இதன் முதலடியின் இறுதியெழுத்து இரண்டாமடிக்கு முதலாகவும், அவ்வடியின் இறுதிச்சீர் மூன்றாமடிக்கு முதலாகவும் தொடுத்தமையால் ஆந்தாதித் தொடை.        
(27)


    505. கம்பம் - கட்டுத்தறி; சாதியடை: “புற்றாடரவா” (தே. சுந்தர.) என்பது போல. களிற்றின் கபாய் - யானைத் தோலாகிய பெருஞ்சட்டை. கபாய்; “கடகளி றுதவு கபாய்மிசைப் போர்த்தவள்” (12.) கபாய்: திசைச்சொல். அம்பை - அம்பிகை. யானைத்தோலோடு யானைக்கொம்பின் அடையாளம் பொருத்தமாக அமைந்தது. கோடு - கொம்பின் சுவடு; ஆகுபெயர்.

    506. கூற்றம் குமைக்க வருமுன் - யமன் உம்மை அடர்க்க வருவதற்கு முன்னர்; “கோவாய் முகடு யடுதிற்ற் கூற்றங் குமைப்பதன்முன்” (தே. திருநா.) நமரங்காள்: 489, 520. ஏற்று வந்தான் - இடப வாகனத்தின்மேல் எழுந்தருளி வந்தவன். பொற்றாளிணையைப் போற்றுமின், அத்தாள், “கூற்றங் குமைத்த குரைகழற்கால்’ ஆதலின் யமபயம் இன்றி உங்களைப் பாதுகாக்குமென்பது குறிப்பு.

    507. உம்பர் பெருமாற்குப் பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து ஒளிர் சடிலம் பொன்பூத்த, தற்பொற்புயம் வேட்டேம் தார் முலையும், பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து பொன்பூத்த என்று கூட்டிப் பொருள் செய்க.

    பொன் மலர் பூத்த கொன்றை - பொன்னின் நிறங்கொண்டு மலர்ந்த கொன்றை; “கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்ப்” (அகநா. கடவுள். 1.)