இது முதலடி அறுசீராய் ஏனையடி நாற்சீராய் வந்த மூன்றடி வெண்டுறை.
514. (1) அம்பு ஏர் - அம்பையொத்த. உண்கண்ணார்க்கு - மையுண்ட கண்களை உடைய மகளிர்பொருட்டு. அழிந்த - அழிவுற்ற. கொம்பு ஏறு உடையான் - கொன்றையுடைய இடபவாகனத்தை உடையவன். வம்பே - வீணே; யாதொரு பயனுமின்றி. இறந்துவிடல் என் என்க.
(3) கோள் - கொலைத் தன்மை. ஆளாக - என்னை அடிமையாகக் கொண்டு.
கழலிறைஞ்சாவிடின் யாதொரு பயனுமின்றி இறந்துவிடல் துணிபாதலின் இங்ஙனம் கூறினர். யாமென்றது ஏனையோரையும் உளப்படுத்தி.
515. பரசிருக்குந் தமிழ் - தேவாரம்; பரசு - பராவுதல். மூவர் - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார். பரசு - மழு அரசிருக்கும் பெருமான் - நடராசப் பெருமான் நமனார் முன்னாகும் - யமனுக்கு முன்னே நிற்கும். சிவபெருமானுக்கு ஆட்படாதார் யம பயத்தினின்றும் எங்ஙனம் நீங்குரென்றபடி. நமனார்: பன்மை இகழ்ச்சிக் குறிப்பு (465).