இது முதலடியிரண்டும் அறுசீராய் ஓரோசைத்தாய் ஏனையடி நாற்சீராய் வேறோரோசைத்தாய் வந்தமையால் ஏழடி வேற்றொலி வெண்டுறை.
516. பவத்தொடர்பு - பிறவியின் சம்பந்தம். வினையும் பிறவியும் ஒன்றுக் கொன்று காரணகாரியமாகத் தொடர்ந்து நிற்கும். ஒழிபு உண்டே; இல்லையென்றபடி; ‘காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரை யின்றி வருதலின் பிறவிப் பெருங்கடலென்றார்’ (குறள், 10 பரிமேல்.) என்பது இங்கே நினைத்தற்குரியது. அடல் அரவம் - கொல்லுதலைச் செய்யும் பாம்பினை. அரைக்கு அசைத்த - இடையிலே கச்சாகக் கட்டிய; அரைக்கு: உருபு மயக்கம். அடிகேள்: விளி.
517. கூற்றின் தன்மை தங்கியிருக்கும் வலியையுடைய சக்கரப் படையை ஏந்திய குரிசில்; திருமால். அசும்பு இருக்கும் பசும்பொன் மன்றம் - தன்னில் தோன்றிய ஒளி துளிப்பது போன்ற தோற்றத்தோடு இருக்கும் பசிய பொன்னாலாகிய சிற்றம்பலம். கொண்டல் ஓடும் குழல் - மேகம் ஓடுதற்குக் காரணமான கூந்தல். கோதை: சிவகாமி யம்மை.