இது நான்கடியாய் அடிதோறும் தனி சொற் பெற்று வந்தமையால் நான்கடிவெளிவிருத்தம்.
518. இருவருக்கு - பிரமதேவருக்கும் திருமாலுக்கும். பாவலன் - சுந்தரமூர்த்தி நாயனார். அகங்கரித்தாருக்கு அரியராகி அடியாருக்கு எளியராக இருப்பா ரென்றபடி; “காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியன் கண்டாய்” (தே. திருநா.) இருமுறை தூது சென்றது: 478.
519. சிவபெருமானே மும்மூர்த்திகளாகவும் உள்ளாரென்பது கூறப்படும்.
அம் கண் கமலத்து அலர் கமலம் மேயீரும் - அழகிய இடத்தையுடைய நீரில் மலர்கின்ற தாமரை மலரில் விரும்பியுறைகின்ற பிரம தேவரும். மேயீர்: முன்னிலை. சுடிகை - உச்சி. அரவு - ஆதிசேடன்.
520. சமன் - யமன். அஞ்ச - நாம் அஞ்சும்படி. வேல் - இங்கே, யமனது சூலம். எதிர்ந்தான் - வந்தான்; துணிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினார். அஞ்சல் - யமனுக்குப் பயப்படுதலை யொழிக மஞ்சு இவர் இஞ்சி - மேகங்கள் ஏறித் தவழ்கின்ற திருமதிலையுடைய; நஞ்சம் அயின்றாரென்றது தேவர் அஞ்சும்படி வந்த ஆலகாலவிடத்தையுண்டு அவரை மரண பயத்தினின்றும் நீக்கியருளியவராதலின், நம்மையும் மரண பயத்தினின்றும் நீக்குவரென்னும் குறிப்பையுடையது. நல்குவர் - தண்ணளி செய்வர். சிற்றம்பல தரிசனம் யமபயத்தை நீக்குமென்றபடி.