இதுவுமது. இஃது அடிதோறும் முதற்கண்ணே அளபெடுத்தமையால் அடியளபெடு. இதனுள் இணையளபெடை முதலாகிய விகற்பம் ஏழும் முறையானே வந்தவாறு காண்க. ஏனைத் தொடு ஏழும், விகற்பம் இருபத்தெட்டும் முன்னர்க் காட்டப்பட்டன.
521. பொற்றாது - பொன்னாகிய உலோகம். பச்சிளங்கொடி - சிவகாமவல்லி யம்மை. செக்கர் - செந்நிறம். கற்பகத்தருவிற்காமவல்லி படர்தலின் இங்கே சிவகாமவல்லியை அவ்வல்லியாக உருவகித்தனர். (பி-ம்.) ‘கற்பகத்தரு’. கற்பகதருவென்று உருவகம் செய்ததற் கேற்ப, வேரென்னும் பொருளும் தோற்றச் சடையைக் கூறினார்; சடை - வேர்.
522. மயில் - முல்லைநிலக் கருப்பொருளாதலின் புனமயிலென்றார்; புனம் - முல்லைநிலம். மாஅங் குயில்கள் - மாமரத்தில் வாழுங் குயில்கள்.சாய்ந்து - மெலிந்து. கோடரங்கள் - குரங்குகள். முசு - ஒருவகைக் குரங்கு கால். தழீஇ - குளிரால் இரண்டு கால்களையும் கைகளாற் கட்டிக் கொண்டு; இந்த நிலையைக் குன்னாக்கலென்றும் முள்காந்திருத்தலென்றும் கூறுவர்; “மந்திகூர” (நெடுநெல். 9). கால் - மழைக்கால். தலைஇ - பெய்து.
மழைபெய்யுங் காலத்து மயில் களிப்பினால் அகவ, குயில் மெலிய, குரங்குகள் ஒடுங்கின.