பக்கம் எண் :

406குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

-தாழிசை-
(1)
பாரித்த பேரண்டஞ் சிறுபண்டி கொளப்பெய்து 
வாரித்தண் புன்றறுஞ்சு மாலுக்கு மால்செய்வீர் 
வேரித்தண் குழலார்கை வளைகொள்ள விழைந்தேயோ 
பூரித்து வீங்குவநும் புயமென்பார் சிலமாதர். 

(2)
சொன்மாலை தொடுத்தணிந்த தொண்டர்க்குத் துணைவராய்
நன்மாலைக் குழலியர்பா னள்ளிருளிற் செலவல்லீர்
பன்மாத ருயிர்கொள்ளல் பழியன்றே பகைகொள்ளும்
வின்மார னுயிர்கொண்ட விழிக்கென்பார் சிலமாதர்.

(3)
அங்கமலன் முடைத்தலையே பலிக்கலனா வையமிடும்  
மங்கையர்க ணலங்கவர்வான் பலிக்குழலு மாதவத்தீர்  
தங்கலர்தங் கியமும்மைப் புரமன்றே தலையன்பின்  
நங்கையர்தம் புரமுமது நகைக்கென்பார் சிலமாதர்.  

    (தாழிசை.) (1) பாரித்த - பரவிய. சிறுபண்டி - சிறிய வயறு. மால் - காம மயக்கம். வேரி - தேன். பூரித்து - பருத்து. இறைவன் திருத்தோட் பெருமை மகளிருக்கு மயலுறுத்தி அவரை இளைக்கச் செய்தலின் வளைநழுவும்; ஆதலின், வளைகொள்ளும் பொருட்டுத் தோள் பருத்தனவென்று கூறினர்.

    (2) “சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்” (பெரிய. தடுத்தாட். 70) என்பதனால் சுந்தரமூர்த்தி நாயனாரைச் சிவபெருமானே பாடப்பணித்தனரென்று தெரிதலின், இங்கே அச்சிறப்புப் பற்றித் தேவாரம் பாடிய வேறு இருவர் இருப்பவும் அவரையே, ‘சொன்மாலை தொடுத்தணிந்த தொண்டர்’ என்று சிறப்பித்தார். துணைவர் - தோழர்; “ஏழிசையா யிசைப்பயனா யின்னுயிரா யென்னுடைய, தோழனுமாய்” (தே.) என்று சுந்தரமூர்த்தி நாயனாரே கூறுதல் காண்க. நன்மாலைக் குழலியர் - பரவை நாச்சியார். ஒரு பெண்ணுக்கு நன்மை செய்த தேவரீரது கண் பல மாதருக்குத் துன்பம் உண்டாக்குதல் முரண்பாடன்றோ என்றவாறு.

    (3) அம் கமலன் - பிரமதேவர். முடை - புலால் நாற்றம். பலிக்கலன் - பிச்சை யேற்கும் பாத்திரம். ஐயம் - பிச்சை. மங்கையர்கள் - தாருகா வனத்து முனிவருடைய மனைவியர். தங்கலர் - பகைவர். தலையன்பின் - சிறந்த அன்பையுடைய (105). நங்கையர்தம் புரம் - மகளிர் உடம்புகள். நும் நகையினால் மகளிர் வெம்மையுறுகின்றனரென்பது கருத்து.