-தரவு- 539. | தொல்லுலகம் படுசுடிகைச் சுடர்மணி விளக்கேந்தும் | | பல்பொறிய படவரவு மடுபுலியும் பணிசெய்ய | | அந்தரதுந் துபிமுழங்க வமரர்மலர் மழைசிந்த | | இந்திரனு மலரவனுங் கரியவனு மேத்தெடுப்பச் | | சூடகத் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப | | ஆடகத் திருமன்றத் தனவரத நடஞ்செய்வோய். |
-தாழிசை- (1) | முன்மலையுங் கொலைமடங்க லீருரியு மும்மதத்த | | வன்மலையுங் கடமலையின் முடையுடலின் வன்றோலும் | | பொன்மலையின் வெண்முகிலுங் கருமுகிலும் போர்த்தென்ன | | வின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே. |
(2) | கடநாக மெட்டும்விடங் கானாக மோரெட்டும் | | தடநாக மவையெட்டுந் தரித்துளபூந் துகிலொன்றும் | | உடனாக வடல்புரியுங் கொடுவரியி னுடுப்பொன்றும் | | அடனாக வரவல்குற் கணிகலையா யசைத்தனையே. |
539. (தரவு.) படு - பொருந்தும். சுடிகை - உச்சி. ஆதிசேடன் உலகத்தைத் தாங்குதலின் அவன் உச்சியைத், ‘தொல்லுலகம் படுசுடிகை’ என்றார். சுடிகைச் சுடர்மணி - தலையிலுள்ள ஒளி வீசும் மணி. மணியாகிய விளக்கை ஏந்தும். படவரவு - ஆதிசேடன்: இங்கே அவனது அவதாரமாகிய பதஞ்சலி முனிவரை. ஆதிசேடன் மணி விளக்கேந்துதல்: “ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கை” (மார்க்கண்டேயனார் காஞ்சி). அடுபுலி - வியாக்கிரபாதர். கரியவன் - திருமால். சூடகம் - கைவளை. துணைவி - சிவகாமவல்லி. அனவரதம் - எப்பொழுதும்.
(தாழிசை.) (1) மலையும் - எதிர்த்த. மடங்கல் ஈருரி - சிங்கத்தின் தோல்; மடங்கல் - சிங்கம்; ஈர் உரி - ஈர்ந்த உரி; “சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணந் தொழநிற்றீர்” (தே. சுந்தர.) கடமலை - யானை. பொன்மலை சிவபெருமானுக்கும், வெண்முகில் சிங்கத்தோலுக்கும், கருமுகில் யானைத் தோலுக்கும் உவமைகள். வில் மலையும் - வில்லை அணிந்த; வில் - ஒளியுமாம். புறம் அலைய. விசித்தனை - கட்டினை.
(2) கடநாகம் - யானை. தடநாகம் - பரந்த மலைகள். பூந்துகிலென்றது திகம்பரத்தை. எட்டுத் திக்குகளிலும் அட்ட திக்கயங்களும் அட்டமா நாகங்களும் அட்ட குலாசலங்களும் உளவென்று கூறுவர். கொடுவரியின் - புலியினது. உடுப்பு - உடை. நாகவரவல்குற்கு - நாகப்பாம்பைப் போன்ற பின் தட்டிற்கு; ஆடவர்க்கு அல்குல் கூறுதல்: “பைவாய்ப் பொறியர வல்குலெந் தாயென்று பாடுதுமே” (553); “மார்பு மல்குலு மனத்தொடு பரியை” (பரி. 13:54.)
|