பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்41

இகல்விழி மகரமு மம்மக ரம்பொரும்
   இருமக ரமுமாட
இடுநூ புரவடி பெயரக் கிண்கி
   ணெனுங்கிண் கிணியாடத்

துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்குல்
   துவண்டு துவண்டாடத்
தொந்தி சரிந்திட வுந்தி கரந்தொளிர்
   சூலுடை யாலடைமற்

றகில சராசர நிகிலமொ டாடிட
   ஆடுக செங்கீரை
அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
   ஆடுக செங்கீரை.    
(6)

20.
தசைந்திடு கொங்கை யிரண்டல வெனவுரை
   தருதிரு மார்பாடத்
தாய்வரு கென்பவர் பேதைமை கண்டு
   ததும்புபு னகையாடப்

பசைந்திடு ஞால மலர்ந்தமை வெளிறியொர்
   பச்சுடல் சொல்லவுமோர்
பைங்கொடி யொல்கவு மொல்கி நூடங்கிய
   பண்டி சரிந்தாட

    (2) விழியாகிய மகரம்; விழிக்கு மகரமினைக் கூறியது மீனென்னும் பொதுமைப்பற்றி; “மகரக் கருங்கட் செங்கனிவாய் மடமான்கன்று” (61.) இருமகரம- இரண்டு மகர வடிவமான குண்டலங்கள். நூபுரம் - காலணி.

    (3) கொடியைப் போன்ற நுண்ணிய மருங்குல்; மருங்குல் - இடை. உந்தியினிடத்தே யாவற்றையும் கரந்து ஒளிரும் சூலையுடைய ஆலிலை போன்ற திருவயிறு: ஆலடை - ஆலிலை. (பி-ம்.) ‘சூலுடையாலிலை.

    (4) அகிலம் - அழிவில்லாதவை. நிகிலம் - உலகம் யாவும்.

    20. (அடி, 1) இரண்டலவென்றது மூன்றென்னும் குறிப்பையுடையது. குழந்தையைத் தாயே வருக வென்பவர், அச்சொல்லுக்குச் செம்பொருள் கொள்ளாமல் மகளென்று பொருள் கொள்வர்; அம்பிகையை அழைப்பவரும் அங்ஙனமே கொண்டனர்; தாயென்னும் சொல்லுக்குச் செம்பொருளே கொள்ளல் இங்கே ஏற்புடைத்தாயினும் உலக வழக்குப்படியே மகளென்று கொள்வாராதலின் அதனைப் பேதைமையென்றார். ததும்பு - மேல் எழுந்த. (பி-ம்.) ‘நன்னகை’,

    (2) பசைந்திடு ஞாலம் - தேவியின் அன்பைப் பெற்ற உலகம். அலர்ந்தமை - வெளிப்பட்டமை. இயல்பான பச்சுடலை மகவீன்றாரது பச்சுடலாகக் கூறினர். பைங்கொடி யென்றது திருவிடையை. பண்டி - வயிறு.