பக்கம் எண் :

412குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

-இருசீரோரடி அம்போதரங்கம்-
பெரியை நீ.    சிறியை நீ.     பெண்ணு நீ.     ஆணு நீ.
அரியை நீ.    எளியை நீ.     அறமு நீ.     மறமு நீ.
விண்ணு நீ.    மண்ணு நீ.    வித்து நீ.    விளைவு நீ.
பண்ணு நீ.    பயனு நீ.    பகையு நீ.     உறவு நீ.

என வாங்கு

-சுரிதகம்-
கற்பனை கழன்றநின் பொற்கழ லிறைஞ்சுதும்    
வெண்மதிக் கடவுண் மீமிசைத் தவழ்தரத்    
தண்முகிற் குலங்க டாழ்வுறப் படிதலிற்    
செங்கா லன்னமும் வெண்மருப் பேனமும்    
கீழ்மே றுருவ வாரழற் பிழம்பாய்    
நின்றநின் றன்மையை யுணர்த்தும்    
பொன்றிகழ் புலியூர் மன்றுகிழ வோனே.    

    இது தாழிசைக்கும் அம்போதரங்கத்திற்கும் இடையே அராகவுறுப்புப் பெற்றுக் கலியுறுப்பு ஆறும் குறைவின்றி வந்தமையால் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. இவ்வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கும், அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கும் சிறுமை பெருமையின்றி ஆறடித்தரவே வந்தவாறு காண்க.        
(59)

540.
சேல்செய்த மதர்வேற்கட் சிலைசெய்த சுடிகைநுதல்
மால்செய்த குழற்கோதை மகிழ்செய்ய நடஞ்செய்யும்
தருணவிளம் பிறைக்கண்ணித் தாழ்சடையெம் பெருமானின்
கருணைபொழி திருநோக்கிற் கனியாத கன்னெஞ்சம்
வாமஞ்சான் மணிக்கொங்கைக் கொசிந்தொல்கு மருங்குலவர்
காமஞ்சால் கடைநோக்கிற் கரைந்தொருகா நிற்குமால்
அவ்வண்ண மாறிநிற்ப தகமென்றா லகமகம்விட்
டெவ்வண்ண மாறிநிற்ப தின்று.

    இது கலித்தளை தட்டுத் துள்ளலோசைத்தாய் வெண்பாவே போல் முடிந்தமையால் வெண்கலிப்பா.    
(60)


    (இருசீரோரடி அம்போதரங்கம்) பண் - இராகம். பயன் - இசையினாற் பெறும் பயன்; “ஏழிசையா யிசைப்பயனாய்” (தே. சுந்தர. திருவாரூர்.)

    இருசீரோரடி அம்போதரங்கம் பதினாறும் சிற்றெண். என வாங்கு என்பதுதனிச்சொல்.

    (சுரிதகம்,) கற்பனை கழன்ற கழல்: 332. துருவ - தேட. பொன்னம்பலத்திற்கு அழற்பிழம்பும், சந்திரனுக்கு அன்னமும், மேகத்திற்கு ஏனமும் உவமைகள்.

    540. சுடிகை - சுட்டி. தருண இளம் பிறை - மிக இளைய பிறை; தருணம் - இளமை. கனியாத - உருகாத. வாமம் - அழகு. அகம் - மனம். அகம் விட்டு - பாவத்தை யொழிந்து.