பக்கம் எண் :

418குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

-தரவு-
547.
ஒருநோக்கம் பகல்செய்ய வொருநோக்க மிருள்செய்ய  
இருநோக்கிற் றொழில்செய்துந் துயில்செய்து மிளைத்துயிர்கள்  
கருநோக்கா வகைகருணை கண்ணோக்கஞ் செயுஞானத்  
திருநோக்க வருணோக்க மிருநோக்குஞ் செயச்செய்து  
மருநோக்கும் பொழிற்றில்லை மணிமன்று ணடஞ்செய்வோய்.  

-தாழிசை-
1.
கடிக்கமலப் பார்வைவைத்துங் கண்ணனார் காணாநின்
அடிக்கமல முடிக்கமல மறியாதே மறிதுமே.
2.
முத்தொழிலின் முதற்றொழிலோன் முடியிழந்தான் றனையிகழ்ந்த
அத்தொழிலிற் கெனிற்றமியே மறிதொழிற்கும் வல்லமே.
3.
இருக்கோல மிட்டுமின்னு முணராதா லெந்தைநின்
திருக்கோல மியாமுணர்ந்து சிந்திக்கக் கடவமே.
4.
நான்மறைக்குந் துறைகண்டார் தோளிழந்தார் நாவிழந்திங்
கூன்மறைக்க மறைப்புண்டே முய்த்துணர்வு பெரியமே.


    547. (தரவு.) ஒரு நோக்கம் பகல் செய்ய - வலத்திருக்கண்ணாகிய சூரியன் பகலை உண்டாக்க; திவாகரனென்னும் பெயர் சுரியனுக் குளதாதலைக் காண்க. ஒரு நோக்கம் இருள் செய்ய - இடத்திருக்கண்ணாகிய சந்திரன் இருளை உண்டாக்க (474); “பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறும், இரவுச் செய்யும் வெண்டிங்களும்” (மதுரைக். 7-8). ஞானத்திரு - ஞானமகள். (பி-ம்.) ‘செய்ஞ்ஞானத் திருநோக்க வருநோக்கம்’.

    (தாழிசை.) 1. பாரவை வைத்தும் - கண்ணைவைத்தும். மலம் முடிக்க அறியாதே மென்க. இத்தாழிசையோடு, 338-ஆம் செய்யுள் ஒப்பு நோக்கற்பாலது. அறிதுமே; ஏகாரம், எதிர்மறைப் பொருளது; பின் வரும் ஏகாரங்களுக்கும் இங்ஙனமே பொருள் கொள்க.

    2. முதற்றொழிலோன் - பிரமதேவன். தனை - நின்னை. இகழ்ந்த அத் தொழிலின் பொருட்டு முடியை இழந்தான். (பி-ம்) ‘தலையிழந்த’,

    3. இருக்கு ஓலம் இட்டும் - வேதம் முறையிட்டு முழங்கியும்.

    4. துறைகண்டார் - வியாசமுனிவர். தோள் - இங்கே கை. தோள் இழந்த வரலாற்றை 466, 493-ஆம் செய்யுட்களிலும் குறித்தனர். நா இழந்து - தாம் கூறிய கூற்றின் பயனை இழந்து; நாவென்றது ஆகுபெயர்; “வாயிழந் பருந்தவன் மறைந்தான்” (அரிச்சந்திர,)என்பது போன்றது. ஊன் - தேகாபிமானம்.