பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை421

2.
உளவயி னுளவள வுணர்வதை யலதுரை
அளவையி னளவிடு மளவினையலை.
3.
அருவெனி னுருவமு முளையுரு வெனினரு
வுருவமு முளையவை யுபயமுமலை.
4.
இலதெனி னுளதுள தெனினில திலதுள
தலதெனி னினதுரு வறிபவரெவர்.

-தாழிசை-
1.
எத்தொழிலுங் கரணங்க ளிறந்தநினக் கிலையைந்து
மெய்த்தொழில்செய் வதுமடிகேள் விளையாட்டு நிமித்தமே.
2.
சீராட்டு நினக்கிலையச் சீராட்டுஞ் சிறுமருங்குற்
பேராட்டி விளையாட்டுன் பெயர்த்தாகி நடந்ததே.
3.
மெய்த்துயர முயிர்க்கெய்தும் விளையாட்டு முலகீன்ற
அத்திருவுக் கிலையதுவு மவர்பொருட்டே யாமன்றே.
4.
இன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலு மீன்றெடுத்த
அன்னைமுனி வதுந்தனயர்க் கருள்புரிதற் கேயன்றே.
5.
எவ்வுருவு நின்னுருவு மவளுருவு மென்றன்றே
அவ்வுருவும் பெண்ணுருவு மாணுருவு மாயவே.
6.
நின்னலா தவளில்லை யவளலா னீயில்லை
என்னினீ யேயவனு மவளுமா யிருத்தியால்.


    2. உளவயின் - உள்ள விடத்தே; உள்ளத்தின்கண்ணே யெனலுமாம். உரையளவையின் - சொல்லளவினால்.

    3. அருவுருவமும் - அரூபமாகிய வடிவமும்; அவை உபயமும் - உருவமும் அருவமுமாகிய அவ்வரண்டும்.

    (தாழிசை.) 1. கரணங்கள் - மனம், வாக்கு, காயமென்பன. ஐந்து மெய்த்தொழில் - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகமென்பன.

    2. சீர் ஆட்டு - சிறப்பை யுடைய நடனம். பேராட்டி - சிவகாமவல்லி.

    3. மெய்த்துயரம் - உடம்பினாலாகிய துயரம்; என்றது பிறவிப் பிணியை.எய்தும் - அடைதற்குக் காரணமாகிய. விளையாட்டு - சிருட்டி முதலியன. பொருட்டே - ஆன்மாக்கள் உய்தற்பொருட்டே.

    4. எத்தொழிலும் இன்னருளே என இயைக்க.