பக்கம் எண் :

422குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அதனால்

-இருசீரோரடி அம்போதரங்கம்-
தந்தை நீ.    தாயு நீ.    தமரு நீ.    பிறரு நீ.
சிந்தை நீ.    உணர்வுநீ.    சீவனீ.    யாவுநீ.

எனவாங்கு

-சுரிதகம்-
நெஞ்சகங் குழைந்து நெக்குநுக் குருகநின்    
குஞ்சித சரண மஞ்சலித் திறைஞ்சுதும்    
மும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில்    
செம்மாந் திருப்பது தீர்ந்து    
மெய்ம்மையிற் பொலிந்த வீடுபெறற் பொருட்டே.    

    இது மயங்கிசைச் கொச்சகம்.    
(68)

கலியினம்
549.
செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள் 
பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள். 
முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான 
புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள். 
ஆங்கற் பகக்கன் றளித்தருளுந் தில்லைவனப் 
பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள் 

    இஃது இரண்டடியாய் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி ஈற்றடிமிக்கு வந்த கலித்தாழிசை.    
(69)


    அதனால் என்பது தனிச்சொல்.

    தமர் - உறவினர்.

    எனவாங்கு என்பது தனிச்சொல்.

    (சுரிதகம்.) மும்மலம் - ஆணவம், மாயை, கன்மம். மலர்க் குரம்பையில் - அழுக்கு நிறைந்த குடிசையாகிய உடம்பில். செம்மாந்து - தருக்குற்று.மெய்ம்மையிற் பொழிந்த வீடு - என்றும் அழியாது மெய்த்தன்மையோடு விளங்கும் முத்தி. பிறவிநோய் தீர்ந்து வீடு பெறும்பொருட்டு இறைஞ்சுவோமென்றார்.

    549. பொல்லாமணி - துளையிடாத மாணிக்கம் போன்றவர். முகிலூர்தி - இந்திரன். புத்தேளிர் போல - புத்தேளிர் புகழ்வது போல. கற்பக்கன்று - கற்பக விநாயகர் (45). தில்லை வனத்திலுள்ள கற்பகமென்றது நடராசப் பெருமானை (521).