இது நெடிலடி நான்காய் வந்தமையால் கலித்துறை.
550. இரு கூற்று உருவத்து - ஆணும் பெண்ணுமாகிய இரண்டு பகுதிகளாகிய திருவுருவத்தை யுடைய. காலகாலனாதலின் ஒரு கூற்றென்று இறைவனைக் கூறினார்; “கூற்றொத் தீயே மாற்றருஞ்சீற்றம்” (புறநா. 56:11) என்பதையும், ‘மணிமிடற்றோனைக் கூற்றமென்றது அழித்தற்றொழிலை யுடைமையான்’என்ற அதன் விசேடவுரையையும் பார்க்க. பொரு கூற்றமென்பது யமனை.
551. கனல் உமிழும் கண்ணை நுதலிலே யுடைய மீளி - நடராசப் பெருமான். அவள் தோற்றென - அக்காளி தோற்றாளாக. கூளி - பேய்கள் (திருச்சிற். 150). குனிப்பது - ஆடுவது.
552. பானல் - குவளை மலர். பசுந்தோகை - தலைவி. யோகப் பயனாவது சாரூபம் பெறுதல். (பி-ம்.) ‘தோகையேமெய்ப் பயன்றுய்ப்ப’. கொன்றை மாலையைத் தலைவி பெற விரும்பி அதனையே நினைந்து. யோகியர் சாரூபம் பெற்றது போல அக்கொன்றையின் உருவத்தை யடைந்தாள். கொன்றையின் உருவமென்றது பொன்னிறமாகிய பசலை நிறத்தை. சாரூப்பியம் - சாரூபத்தின் தன்மை. “வியந்துசொலி னன்னதும் பொன்னிறமே யெங்கண் மின்னிறமும் பொன்னிறமே” (அருணைக்கலம். 14). ஊனக் கண்ணும் புறக்கண்ணுமாகிய இஃது உள்ளக்கண்ணாகிய ஞானக் கண்ணாகவே ஆதலை அளிக்கும். ஞானக்கண்ணால் தம் திருக்கோலத்தைத் தரிசித்து மெய்ஞ்ஞானியர் பெறும் பயனை ஊனக் கண்ணால் தரிசித்தாரும் இத்தலத்திற் பெறுதலின் அவ்வூனக்கண்ணே ஞானக்கண் போல் உதவு மென்க.