இது நிரையசை முதலாகிய கட்டளைக் கலித்துறை. இதன் முதலடி வழியெதுகை.
553. பைந்தோகை - உமாதேவியார். திருவுருவொன்று: 110, 534. வாச்சியம் - பொருள். (பி-ம்.) ‘எவ்வாச் சியத்தி னெடுத்திசைப்பேம்’. பை வாய்ப் பொறியரவல்குலெந்தாய்: சிலேடை; அரவுபோன்ற அல்குலையுடைய எம் தாயே எனவும், அரவை யணிந்த அல்குலையுடைய எம் தந்தையே எனவும் இரு பொருள் கொள்க. அல்குல் - பின்தட்டு; ஆடவர்க்கும் கூறப்படும் (539.)
554. கரும்பு காமனுக்கு வில்; சுரும்பு நாண்; அரும்பு அம்பு “சுருப்பு நாண் கருப்புவி லருப்புக்கணை தூவ” (மணி. 18:105). இரும்பு - இரும்பு போன்ற மனம். மென்மையாகிய கருவிகளையுடைய காமன் இரும்பு போன்ற நெஞ்சத்தையும் உருக்குதல் இறைவன் அருளினாலமைந்த தென்றபடி; 187-ம் செய்யுளைப் பார்க்க; “யானை யரதம் பரியா ளிவையில்லை, தானு மநங்கன் றனுக்கரும்பு - தேனார், மலரைந்தால் வென்று வடுப்படுத்தான் மாரன், உலகங்கண் மூன்று மொருங்கு” (தண்டி. 77, மேற்.) இறும்பூது - வியப்பு. ஒரு துரும்பும் இறைவன் திருவருளுண்டாயின் படைத்தல் முதலிய செயல்களைச் செய்யுமென்றவாறு. இறைவன் ஓர் இயக்க வுருவினனாகி ஒரு துரும்பை நாட்டி அதனை அசைக்கும்படி தேவர்களுக்குக் கூற, அவர்கள் அங்ஙனம் செய்ய இயலாமல் தம் தருக்கழிந்த செய்தி இங்கே நினைவுக்கு வருகின்றது.