பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்43

சந்த விருத்தம்
22.
குருமணி வெயிலவிட மரகத நிழல்விரி
   குன்றே நின்றூதும்
குழலிசை பழகிய மழைமுகி லெழவெழு
   கொம்பே வெம்பாசம்

மருவிய பிணிகெட மலைதரு மருமைம
   ருந்தே சந்தானம்
வளர்புவ னமுமணர் வருமரு மறையின்வ
   ரம்பே செம்போதிற்

கருணையின் முழுகிய கயறிரி பசியக
   ரும்பே வெண்சோதிக்
கலைமதி மரபிலொ ரிளமதி யெனவளர்
   கன்றே யென்றோதும்

திருமகள் கலைமக டலைமகண் மலைமகள்
   செங்கோ செங்கீரை
தெளிதமிழ் மதுரையில் வளருமொ ரிளமயில்
   செங்கோ செங்கீரை.    
(9)

    22. (சந்தக்குழிப்பு.) தனதன தனதன தனதன தனதன தந்தா தந்தான,

    (அடி, 1) குரு - நிறம். மணிகள் அம்பிகை யணிந்த ஆபரணங்களிலுள்ளவை. முகில்: திருமால், எழ எழு கொம்பு - முன்னே வரப் பின்வந்த பூங்கொம்பு போல்வாள்; அவர் தங்கையென்றபடி.

    (2) மலைமகளாதலாலும் பிறவிப் பிணி கெடச் செய்தலாலும், மலைதருமருந்தே யென்றார்; மருந்து - பச்சிலை; மலை மருந்து சிறந்தத்து. சந்தானம் வளர் புவனம் - சந்தான மென்னும் தரு வளர்கின்ற தேவலோகம்; சந்தானம் - ஐந்து தருக்களில் ஒன்று. செம்போதென்றது திருமுகத்தை.

    (3) கயல் என்றது கண்களை. கன்றே - மான்கன்று போல்வாய்.

    (4) திருமகளுக்கும் கலைமகளுக்கும் தலைமகள்; விளி. செங்கீரையென்றது செங்கோஙென மருவியது; அதன்பின் ஆடியருளே யென்பது எஞ்சி நின்றது.