பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை431

10
அஞ்சிறைச் சுதைநிறச் செஞ்சூட் டன்னமும்
செம்மயிர்க் கருங்கண் வெள்ளெயிற் றேனமும்
ஆகுபு தனித்தனி யலமர நிவந்த
மீகெழு பரஞ்சுடர் வெளிப்பட் டம்ம
எம்மனோர் போல வினிதெழுந் தருளிக்
15
கைம்மா றற்ற கணக்கில்பே ரின்ப
மோனவாழ் வளிக்கு ஞான தேசிகன்
விரிகதிர் பரப்பு மரகதத் தகட்டிற்
சுடர்செய் செம்மணி யிடையிடை பதித்தெனப்
பாசடைப் பரப்பிற் பதும ராசிகள்
20
சேயிதழ் விரிக்குஞ் செழுமல ரோடையும்
அண்டகோ ளகையு மெண்டிசா முகமும்
கோட்டுடைத் தடக்கை நீட்டிளந் தென்னச்
சேட்பட நிவந்த செண்பகா டவியும்
கால்கிளர் விசும்பிற் கற்பகா டவிக்கு
25
வேலியிட் டன்ன வியன்மணிப் புரிசையும்
மருங்குசூழ் கிடந்த வண்டமிழ்க் கமலைப்
பெரும்பதி புரக்கும் பேரருட் குரிசில்


கும் தொழில். பொதுக்கடிந்து அளிக்கும் - தனியுரிமை கொண்டு பாதுகாக்கும். கமலக் கண்ணன் - திருமால்.

    (10-13) சுதை நிறம் - வெண்ணிறத்தையுடைய. செஞ்சூடு - சிவந்த உச்சிக் கொண்டையையுடைய. ஏனம் - பன்றி. அலமர - சுழலா நிற்ப. நிவந்த - உயர்ந்து நின்ற. பரஞ்சுடர் - சிவமாகிய மேலான ஒளி.

    (14-6) எம்மனோர்போல எழுந்தருளி - மானிடராகிய எம்மைப் போலத் தானும் ஒரு மானிடத்திருவுருவங் கொண்டருளி (567); “ஈறிலாத நீ யெளியை யாகிவந் தொளிசெய் மானிடமாக நோக்கியும்” (திருவா. திருச்சதகம், 91). கைம் மாறற்ற .......... தேசிகன்: “அந்த மொன்றில்லா வானந்தம் பெற்றேன் ........... யானில னிதற்கொர்கைம்மாறே” (திருவா. கோயிற்றிருப்பதிகம், 10).

    (17-27) திருவாரூரின் சிறப்பு.

    பதுமராசிகள் - தாமரை மலர்த் தொகுதிகள். தாமரையிலைக்கு மரகதத் தகடும், அதன் மலருக்கு மாணிக்கமும் உவமைகள். அண்டகோளகை அண்டமாகிய உருண்டை. கோட்டுடைத் தடக்கை நீட்டி அளந்தென்ன - கொம்புகளாகிய தன்னுடைய பரந்த கைகளை நீட்டி யளந்தாற்போல. விசும்பு - தேவலோகம். புரிசை - மதில். கமலை - திருவாரூர். தருமைத் திருஞான சம்பந்த தேசிகருடைய குருமூர்த்தி திருவாரூர் ஞானப்பிரகாச தேசிகர். பின்வந்த தேசிகரையும் முன்புள்ள ஆசிரியர்களாகவே நினைந்து