பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை435

அங்கது புரிதற் கரிதெனி னிங்கொரு    
சனனமியான் வேண்டுவ தினிதரு ளெனக்கே, அதுவே    
ஐந்தரு நிழற்கீ ழரசுவீற் றிருக்கும்    
இந்திர னாகிவாழ்ந் திருப்பதோ வன்றே    
30
மலரோ னாகி மன்னுயிர்த் தொகுதி    
பலர்புகழ்ந் திசைப்பப் படைப்பதோ வன்றே    
அடலரா வணையி லறிதுயி லமர்ந்த    
கடவுளா யுலகங் காப்பதோ வன்றே, அவைதாம்    
ஆரா வின்பமென் றரும்பெயர் பெறினும்    
35
வாரா வல்வினை வருவிக் கும்மே    
அன்னவை யொழியமற் றென்னைகொல் பிறவெனின்    
விழுத்தகு கல்வியு மொழுக்கமு மிலராய்ப்    
பழிப்புள ராயினு மாக வழுத்துநின்    
பொன்னடித் துணைசேர் நின்னடித் தொண்டர்    
40
திருவமு தார்ந்து தெருக்கடை யெறிந்த    
பரிகல மாந்தியிப் பவக்கட லுழக்கும்    
வரனுடை ஞமலி யகிநின்    
அருளையு மயரா தவதரிப் பதுவே.    
(5)

நேரிசை வெண்பா
570.
அவமாசி லாமனத்தார்க் காருயிரா ஞானோற்
பவமாசி லாமணிச்சம் பந்தா - தவமார்
ததியருளத் தானேநின் சந்நிதிப்பட் டேற்குக்
கதியருளத் தானே கடன்.    
(6)


    (28-35) இந்திரபதவி முதலியவற்றில் விருப்பின்மையை உணர்த்துகின்றார்.

    ஐந்தரு - ஐந்துவகைக் கற்பக விருட்சங்கள். அவைதாம் - இந்திரன், பிரமன், திருமால் என்பார் பதவிகள்; “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு” (திருவா.) ஆரா இன்பம் - தெவிட்டாத இன்பம்.

    (37-43) அடியார் பெருமை புலப்படுத்தப்படும்.

    பரிகலம் - பரிகலசேடம்; எச்சில்; உண்கலத்தைக் குறிக்கும் இச்சொல் இங்கே ஆகுபெயராய் நின்றது. ஞமலி - நாய். அயராது - மறவாமல். அவதரிப்பது - பிறப்பது.

    அவதரிப்பதுவே (43) ஆகிய ஒரு சனனம் வேண்டுவது அருள் (27) என்க.

    570. ஞானோற்பவ - ஞானத்தை உண்டாக்குவோய். ததியர் = ததீயர் - அடியார்; இச்சொல் வைணவர்களிற் பெருவழக்கு. கதியை அருளத்தான் கடன்.