பக்கம் எண் :

436குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
571.
கடல்பெற்ற தோர்மணி சிந்தித்த நல்குங் கருத்துக்கெட்டா
மிடல்பெற்ற பேரின்ப நல்கிய வாவருள் வேலைபெற்றென்
உடல்பெற்ற கண்மணிக் குண்மணி யாகியொண் கூடல்வைகும்
அடல்பெற்ற ஞானச் சுடர்மாசி லாமணி யானதொன்றே.    
(7)

நிலைமண்டில வாசிரியப்பா
572.
ஒன்றே தன்மை யுனக்குமற் றெமக்கும்
அன்றென மொழியினு மாமெனப் படுமே
அங்ஙனங் கூறிய தெங்ஙனம் பிறவெனின்
எஞ்ஞான் றுளையுள மஞ்ஞான் றியாமே
5
அழியா நிலைமையை யனையம் யாமே
வியாபக நினக்குள தியாமுமஃ துளமே
அறிவெனப் பெயரிய பெயரினை யப்பெயர்
பிறிவரும் பெயராப் பெற்றனம் யாமே
இச்சா ஞானக் கிரியையென் றிசைக்கும்
10
சத்திக ளுளையுள தத்திற மெமக்கே
இந்நிலை முழுவதூஉ மெமக்குமுண் டாகலின்
அந்நிய மலநினக் கநநிய மியாமே
தருமையுங் கமலையும் விரிதமிழ்க் கூடலும்
திருநக ராக வரசுவீற் றிருக்கும்
15
மாசி லாமணித் தேசிக ராய
சம்பந் தப்பெயர் தரித்தமை யாலெமைச்
சம்பந் தஞ்செயத் தகுந்தகு நினக்கே
கருவிகட் கிறைமை காட்டுபு நிற்றலிற்

    571. கடல் பெற்றதோர் மணி - சிந்தாமணி. நல்கியவா - வழங்கியவாறு என்ன வியப்பு! அருள்வேலை பெற்று - அருட்கடலைத் தான்பெற்று. கூடல் - மதுரை. சிந்தாமணி கடலாற் பெறப்பட்டுச் சிந்தித்தவற்றைத் தரும்; மாசிலாமணி ஒரு கடலையே தான் பெற்றுச் சிந்தைக்கு எட்டாத இன்பத்தைத் தருமென்று இரண்டுக்கும் வேற்றுமை கூறியவாறு.

    572. (அடி, 1-11) சிவத்துக்கும் சீவனுக்கும் உள்ள ஒப்புமைகள் கூறப்படும்.

    (4) “என்றுநீ யன்றுநா னுன்னடிமை யல்லவோ” (தாயுமானவர்.)

    (13) கமலை - திருவாரூர்.

    (18) கருவிகட்கு இறைமை - தத்துவங்களுக்குத் தலைமை.