பக்கம் எண் :

438குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பேரா வியற்கை பெற்றினி திருப்ப
ஆரா வின்ப மளித்தரு ளெமக்கே.    
(8)

நேரிசை வெண்பா
573.
எம்மா ருயிரா மெழின்மாசி லாமணியை
அம்மா பெறுதற் கரிதன்றோ - சும்மா
இருந்தாரே பெற்றார்மற் றெவ்வுலகில் யாரே
வருந்தாது பெற்றார் மணி.    
(9)

கட்டளைக் கலித்துறை
574.
    மணிகொண் டவர்தம் பொருளாவ    
       தன்றியம் மாமணியாம்    
    அணிகொண் டவரைக்கொண் டாள்வதுண்    
       டேயருட் கூடல்வைகும்    
    கணிகொண்ட கொன்றைத் தொடைமாசி    
       லாமணி கண்டவுடன்    
    பணிகொண்டு தொண்டுங்கொண் டாளுங்கொள்    
       வோமென்று பார்க்குமுன்னே.    
(10)

    (38) பேராவியற்கை - எஞ்ஞான்றும் ஒரு நிலையாம் இயல்பு; என்றது வீட்டினை; ‘களிப்புக் கவற்சிகளும் பிறப்புப்பிணி மூப்; பிறப்புக்களும் முதலாயினவின்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய் நிற்றலின், வீட்டினைப் பேராவியற்கை யென்றும்’ (குறள், 370, பரிமேல்.) என்பது இங்கே அறிதற்குரியது.

    (39) ஆராவின்பம் - தெவிட்டாத ஆனந்தம் (569: 34, 575: 33, 590; 9).

    573. சும்மா இருந்தார் - செயல் மாண்டு இருந்தவர்; “சும்மா விருசொல் லறவென் றலுமே, அம்மா பொருளொன் றுமறிந் திலனே” (கந்தரநுபூதி). மற்ற மணிகள் செய்தற்கரிய செயல்களைச் செய்து பெறுவது; இது செயலேயில்லார் பெறுவதென்று வேற்றுமை உணர்த்தினார்; “செய்தற்கரிய செயல் பலவுஞ் செய்துசிலர், எய்தற் கரியதனை யெய்தினார்கள் - ஐயோ நாம், செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச், செய்யாமை செய்யாத வாறு” (திருக்களிற்றுப்படியார், 61) என்பதை ஓர்க.

    574. உலகிலுள்ள மணிகளுக்கும் மாசிலாமணிக்கும் வேற்றுமை கூறியவாறு.

    மாமணியாம் அணி. உண்டே, ஏ: வினா. கண்ணியாக்க் கொண்ட கொன்றை. கொள்வோமென்றெண்ணிப் பார்க்குமுன்னே இம்மணி ஆட்கொள்ளுமென்க.