பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை439

நிலைமண்டில வாசிரியப்பா
575.
முற்படு மாயை முதற்கரை நாட்டிற்
பற்பல புவனப் பகுதி பற்றி
ஈரிரு கண்ணாற் றெழுதரம் வகுத்த
ஆறே ழிரட்டி நூறா யிரத்த
5
செயற்படு செய்களி னுயிர்ப்பயி ரேற்றி
ஊழெனப் பட்ட தாழ்புனற் படுகரிற்
றெய்விக முதலாச் செப்புமும் மதகும்
ஒவ்வொரு மதகா யுடனுடன் றிறந்து
தாக மென்னுந் தனிப்பருங் காலிற்
10
போக மென்னும் புதுப்புனல் கொணர்ந்து
பாயுமைம் பொறியாம் வாய்மடை திறந்து
பருவம் பார்த்து வரன்முறை தேக்கலும்
இதத்துட னகித மெனுமிரண் டூற்றிற்
புதுப்புனல் பெருகிப் புறம்பலைத் தோட
15
வார்புன லதனை மந்திர முதலா
ஓரறு வகைப்படு மேரிக ணிரப்பி
விளைவன விளைய விளைந்தன வறுத்தாங்


    575. இச் செய்யுளின் முற்பகுதியில் ஞானாசிரியரை உழவனாக உருவகம் செய்கின்றார்.

    (அடி, 1) முற்படு மாயை - சுத்த மாயை. முதற்கரை நாட்டில் - முதலாகச் சொல்லப்பட்ட நாடுகளில்; என்றது சுத்தமாயை; அசுத்தமாயை, பிரகிருதி மாயையென்னும் மூன்றன் புவனங்களையும். (பி-ம்.) ‘முற்படு வையம்’.

    (3) ஈரிரு கண்ணாறு - அண்டச முதலிய நால்வகைத் தோற்றமாகிய கண்ணாறு; கண்ணாறென்பது வயல்களுக்குப்பாயும் பெரிய வாய்க்கால்; “ஆறுபுனல் பாய்வனக்கண் ணாறுபணை தோறும்” (திருக்குற். நாட்டுச். 38). எழுதரம் வகுத்த - எழுவகைப் பிறப்பாகிய வரிசையாக வகுக்கப் பெற்ற; தரமென்பது வயல்களின் தகுதிக்கேற்பப் பிரிக்கும் ஒருவகைப் பிரிவு; வழக்கு.

    (4-5) எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்களாகிய வயல்களில். செய் - வயல்.

    (6) படுகர் - நீர்நிலை.

    (7-12) தெய்விகம் முதலிய மூன்றாவன ஆதிதெய்விகம், ஆதிபௌதிகம், ஆதியாத்மிகமென்பன. தாகம் - ஆசை. கால் - வாய்க்கால். போகம் - இன்பதுன்ப அநுபவம்.

    (13-9) இதம் - விருப்பு. அகிதம் - வெறுப்பு. மந்திரம் முதலாகிய ஆறு ஏரிகளாவன ஆறு அத்துவாக்கள். விளைவன - ஆகாமியம் விளைந்தன - பிராரத்தம்.