10. | எம்முருக் கொண்டு மெம்மொடு பயின்றும் | | மும்மலக் கிழங்கை முதலொடு மகழ்ந்து | | சிற்பர முணர்த்துஞ் சற்குரு ராய | | பளிங்கினிற் குயின்ற பனிநிலா முற்றத்து | | விளங்கிழை மடந்தையர் விளையாட் டயர்தரக் | 15. | கொங்குவார் குழலுங் குவளைவாள் விழியும் | | பங்கய முகமும் பத்திபாய்ந் தொளிர்தலிற் | | சைவலம் படர்ந்து தடங்கய லுகளும் | | செய்யபூங் கமலச் செழுமல ரோடையென் | | றாடவர் சிற்சிலர் நாடினர் காணூஉ | 20. | வம்மின் வம்மின் மடந்தையர் நீவிர்மற் | | றம்மெ லோதி யரம்பைய ராதலின் | | நீர்நிலை நிற்றிரா னீரவர் தங்களுள் | | யார்கொல் யார்கொ லிசைமி னிசைமினென் | | றிறும்பூ தெய்தி யிரந்தன ரிசைப்ப | 25. | மறுமொழி கொடாது குறுநகை முகிழ்த்தாங் | | கையுற வகற்று மணிமதிட் கமலை | | நன்னகர் புரக்கு ஞான தேசிக | | ஆசிலா வண்புக ழணிநிலா வெறிக்கும் | | மாசி லாமணி ஞானசம் பந்த |
(10) எம் உருக்கொண்டென்றது சகலர்க்கு அருள் செய்யும் முறையை.
(7-10) மூவகை யான்மாக்களுக்கும் இங்கே கூறியபடி அநுக்ரகம் செய்வதன் விரிவு கந்தர் கலிவெண்பா, 30-33-ஆம் கண்ணிகளாலும் அவற்றிம் குறிப்புரையாலும் விளங்கும்.
(13-26) திருவாரூர்ச் சிறப்புக் கூறப்படும்.
(13-18) நிலா முற்றம் நீர் நிறைந்த ஓடையாக உருவகிக்கப்படும்.
(13) குயின்ற - செய்யப்பட்ட.
(15-24) மகளிர் விளையாடும் பளிங்குமாடத்தை நீர்நிலையென்றும், அவருடைய கூந்தலைச் சைவலமென்றும், கண்களைக் கயல்களென்றும், முகத்தைத் தாமரைமலரென்றும் நினைந்த இளைஞர் அவரைத் தெய்வ மகளிரென்று ஐயுற்றுப் பின், நீரர மகளிரென்று துணிந்து நீவிர் அவருள் யாரென்று கேட்ப, அம்மகளிர் குறுநகையால், ஐயத்தை நீக்குதற்கு இடமான கமலையென்க; அந்நகை தம் பேதமை நிலைக்களனாக மகளிரிடத்துத் தோன்றியதை உணர்ந்து இளைஞர் ஐயம் நீங்கினர்.
|