பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்45

3.தாலப் பருவம்

ஆசிரிய விருத்தம்
24.
தென்னத் தமிழி னுடன்பிறந்த
   சிறுகா லரும்பத் தீயரும்பும்
தேமா நிழற்கண் டுஞ்சுமிளஞ்
   செங்கட் கயவாய்ப் புனிற்றெருமை

இன்னம் பசும்புற் கறிக்கல்லா
   இளங்கன் றுள்ளி மடித்தலநின்
றிழிபா லருவி யுவட்டெறிய
   எறியுந் திரைத்தீம் புனற்பொய்கைப்

பொன்னங் கமலப் பசுந்தோட்டுப்
   பொற்றா தாடக் கற்றைநிலாப்  
பொழியுந் தரங்கம் பொறையுயிர்த்த  
   பொன்போற் றொடுதோ லடிப்பொலன்சூட்

டன்னம் பொலியுந் தமிழ்மதுரைக்
   கரசே தாலோ தாலேலோ
அருள்சூற் கொண்ட வங்கயற்கண்
   அமுதே தாலோ தாலேலோ    
(1)

    24. (அடி, 1) தென்னந் தமிழ் - தென்றமிழ்; அம்; சாரியை. சிறுகால் - தென்றல். தென்றற்காற்று வீசுங் காலத்து மாமரம் சிவந்த தளிர் விதுவதைச் ‘சிறுகாலரம்பதி தீயரும்பும்’ என்று குறித்தார்; “திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா” (நன்னெறி, 19) மாந்தரிளுக்குத் தீ உவமை (ஐங். 349) கயவாய் - ஆழமான வாய்; (பி-ம்.) ‘கருவாய்’. புனிறு - ஈன்ற அணிமை.

    (2) உவட்டெறிய - பெருக்கெடுப்ப.

    (3) பசுந்தோட்டுப் பொற்றாடு - இளைய இதழிலுள்ள பொன் போன்ற பூந்தாது. தரங்கம் பொறையுயிர்த்த பொன் - கடலாற் பெறப்பட் திருமகள். சூட்டு - உச்சிக் கொண்டை.

    (4) ‘தாலோ தாலேலோ’ என்றது குழந்தையைத் தாலாட்டுவார் கூறும் ஒருவகை வாய்ப்பாடு. தம் நாவை ஆட்டி இதனைப் பாடுவதனால் இதற்குத்தாலாட்டென்னும் பெயர் வந்தது; தால் - நா; தாலாட்டுப் பருவமென்றது தாலப் பருவமென நின்றது.

    எருமை தன் கன்றை நினைந்து சொரிந்த பாலால் பொய்கை பாற்கடல் போலத் தோன்றத் தாமரைத் தாதினிடையே ஆடப் பொன்னிறம் பெற்று அம்மலரிலே இருந்த அன்னம் திருமகளைப் போலத் தோற்றியது.