பக்கம் எண் :

452குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அவகர ணங்களே யல்லமற் றம்ம    
30.
சிவகர ணங்களாய்ந் திரிந்தன வன்றே, அதனாற்    
றிரிகர ணங்களெள் றுரைசெயு மப்பெயர்    
ஒருபொருட் களவியெல் லோர்க்கும்    
இருபொருட் கிளவியா யிருந்ததின் றெனக்கே.        
(23)

நேரிசை வெண்பா
588.
எற்கமலஞ் செய்யு மெழின்மாசி லாமணிதன்
பொற்கமலஞ் சென்னி பொலிவித்தேன் - நற்கமலை
ஊரிற் குறுகினே னோர்மாத் திரையளவென்
பேரிற் குறுகினேன் பின்.    
(24)

கட்டளைக் கலித்துறை
589.
பின்னம் கடைத்த சமய விரோதப் பிணக்கறுத்தோர்
சின்னம் படைத்த முனிமாசி லாமணிச் சித்தரியாம்
இன்னம் படைத்தவரேது பெறாரமு திங்கெமக்கென்
றன்னம் படைத்தவர் பெற்றார் புவன மடங்கலுமே.    
(25)

    (29) அவகரணங்கள் - வீண்செயலைச் செய்யும் கரணங்கள்.

    (31-3) திரிகரணங்களென்பது மூன்று கரணங்களென்னும் ஒரே பொருளைத் தருவதாகிப் பிறர் திறத்தே வழங்குகின்றது; என்பால் அச்சொல், பழைய இயல்பு மாறித் திரிந்தவையாதலின் திரிந்த கரணங்களென்று மற்றொரு பொருளும் பெற்று இரு பொருட் கிளவியாகி நின்றது.

    588. அமலம் - மலமற்ற தன்மையை. ஊரிற் குறுகினேன் - ஊரையடைந்தேன். என்பே ரென்றது சீவனென்பதை. அஃது ஒரு மாத்திரை குறைந்ததாவது சிவன் என்பது; சிவமானே னென்றபடி; மலமறுத்துச் சிவமாக்கி யருளினாரென்று கொள்க; “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட, அத்தன்” (திருவா. அச்சோ.) இதில் மாத்திரைச் சுருக்கமென்னும் அணி அமைந்துள்ளது.

    589. இச்செய்யுள் கலம்பகங்களில் வரும் சித்து என்னும் உறுப்பைப் போன்றது; ஒரு சித்தர் இரு பொருள்படக் கூறும் கூற்றாக அமைந்தது. பின்னம் - வேறுபாடு. பிணக்கு அறுத்து ஓர் சின்னம் படைத்த; சின்னம் - வெற்றிக்கு அடையாளம்; காகளமுமாம். மாசிலாமணியின் அருள்பெற்ற சித்தர். எமக்கு அமுது என்று இங்கு அன்னம் படைத்தவர் புவன மடங்கலும் பெற்றார் - எமக்குரிய அமுதமாமென்று கூறி இங்கே சோற்றை இட்டோர் அதன் பயனாக உலக முழுவதும் பெற்றார்; அன்னப் பறவையை வாகனமாகப் பெற்ற பிரமதேவர் உலகமுழுவதும் சிருட்டி செய்தாரென்பது இயல்பான பொருள். இன்னம் படைத்தவர் - இன்னும் அன்னம் படைத்தவர். ஏது பெறார் - என்ன பயனைப் பெற மாட்டார்?