பக்கம் எண் :

பண்டார மும்மணிக்கோவை453

590.
அடங்கா வைம்புல னடங்கினார்க் கம்ம
ஒடுங்கா வைம்புல னுளத்தினு முளவே, அவைதாம்
செவிப்புல னறியா வகத்தொலி யொன்றே
மெய்ப்புல னறியாத் தட்பமற் றொன்றே
5.
கட்புல னறியாக் கதிரொளி யொன்றே
நாச்சுவை யறியா நறுஞ்சுவை யொன்றே
மூக்குயிர்த் தறியா முருகுமற் றொன்றே
பேரா வின்பமிப் பெற்றியிற் றிளைக்கும்
ஆரா வின்பமொன் றார்ந்தனம் யாமே, அதுவே
10.
கரையெறிந் தார்க்கும் பொருபுனற் படுகரிற்
பணிலமீன் றளித்த மணிநிலாப் போர்ப்பத்
தருணவெள் ளெகினந் தன்னகத் தடங்க
அருண முண்டக மகவிதழ் முகிழ்ப்பது
தெண்டிரை யுடுத்த தீம்புனன் மடந்தை
15.
வெண்டுகிற் படாஅம் விரித்தனள் போர்த்து
வள்ளவாய்க் கமல மலர்க்கையால் வளைத்துப்
பிள்ளைவெள் ளெகினம் பிடிப்பது கடுக்கும்
காசுலாம் பசும்பொற் கடிமதிற் கமலை
மாசி லாமணி ஞானசம் பந்தனென்
20.
றருந்தவர் துதிப்பவோர் பெரும்பெயர் நிறீஇப்

    590. (அடி, 1-9) சிவயோகாநுபவத்தின்கண் நுகரும் உண்முக நுகர்ச்சிகளை இவ்வடிகளிற் கூறுகின்றார். அடங்கா ஐம்புலனென்றது புறத்தே நுகரும் நுகர்ச்சிகளை. உளத்தினு முளவே யென்பதை விரிக்கின்றார். ஐம்புலன் - ஐம்பொறிகளால் நுகரப்படும் பொருள்கள். மெய்ப்புலன் - மெய்யாகிய இடம். தட்பம் - குளிர்ச்சி. முருகு - நறுமணம்.

    (10-18) திருவாரூர்த் தடாகச் சிறப்புக் கூறப்படும்.

    படுகர் - நீர்நிலை. பணிலம் - சங்கு. மணி - முத்து; எழுவாய். தருணம் - இளமை. எகினம் - அன்னப்பறவை. அருண முண்டகம் - செந்தாமரை. முகிழ்ப்பது - குவிதல். புனல் மடந்தை - நீராகிய மகள். முகத்தின் ஒளிக்கு அம்மகளின் துகிலும் தாமரைக்கு அவள் கையும் உவமை. முத்தின் ஒளியை நிலவெனக்கருதித் தாமரை குவிந்தது; இது திரிபதிசயவணி.